>> Friday, December 18, 2009

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 22 பேர் போட்டி

இலங்கையில் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 22 பேரது மனுக்கள் தேர்தல் ஆணையரால் ஏற்கப்பட்டுள்ளன.

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருக்கு எதிராக, ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் உட்பட 23 பேர் இன்று வேட்பு மனுக்கள் இன்று தேர்தல் ஆணையரிடம் கையளிக்கப்பட்டன.

மொத்தம் 23 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் ஒரு வேட்பாளரின் வேட்புமனு தேர்தல் ஆணையரால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, இப்போது 22 பேர் களத்தில் உள்ளனர்.

ஒரு புத்த பிக்கு, இடதுசாரி முன்னணி வேட்பாளர் கலாநிதி விக்ரமபாகு கருணரத்ன, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

.



--------------------------------------------------------------------------------


வரிச்சலுகைத் தொடர்பில் வாக்குறுதியை மீறியது இலங்கை என்று ஐரோப்பிய ஆணையம் குற்றச்சாட்டு



இலங்கையிலிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அளிக்கப்படும் ஜி எஸ் பி பிளஸ் எனப்படும் ஏற்றுமதி வரிச்சலுகை தொடர்பில் கொடுத்த வக்குறுதியை இலங்கை கடைபிடிக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வரிச்சலுகையை பெறும் நாடுகள் சர்வதேச அளவுகோலின் படி மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இலங்கை அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்று ஐரோப்பிய ஆணையம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, அந்த அமைப்பின் வர்த்தகத் துறையின் பேச்சாளர் கிறிஸ்டியானா ஹொஹ்மேன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த விசாரணையை அடுத்து, இலங்கைக்கு அளித்து வரும் வரிச்சலுகையை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கும் வகையில் ஒரு பிரேரணையை ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதன் மீது முடிவெடுக்க உறுப்பு நாடுகளுக்கு இரண்டு மாதம் கால அவகாசம் உள்ளது. அந்த முடிவு வெளியான பிறகு அதை நடைமுறை படுத்த ஆறுமாத காலம் ஆகும்.

ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய விசாரணையில் தமது தரப்பு கருத்துக்களையும் வழங்க இலங்கைக்கு ஐரோப்பிய ஆணையம் அழைப்பு விடுத்தது. ஆனாலும் இலங்கை அரசு ஒத்துழைக்க மறுத்துவிட்டது என்றும் ஐரோப்பிய ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய விசாரணைகளில், இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் குறிப்பிட்ட அளவில் குறைபாடுகள் இருக்கின்றன என்று தெரியவந்துள்ளது.



--------------------------------------------------------------------------------


இழுபறியில் காலநிலை மாநாடு



காலநிலை மாற்றம் தொடர்பிலான ஐ.நா மன்ற மாநாட்டின் இறுதியில் சர்வதேச நாடுகளை கட்டுப்படுத்தக்கூடிய ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவாக இருப்பதாகவே அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த மாநாட்டின் இறுதி ஒப்பந்தம் அல்லது பிரகடனம் குறித்த வரைவு நகலை வடிவமைப்பதில் இன்று காலையில் பெரும் குழப்பம் நிலவியது. அத்துடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்ததைப்போல இந்த மாநாட்டின் இறுதி நாளான நாளை கலந்துகொள்ள மாட்டார் என்று ஊகங்கள் எழுந்தன.



மாநாட்டில் கலந்துகொண்ட பல நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தைகளில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர்.

ஜெர்மனியின் அரச தலைவர் அங்கெலா மெர்கல், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட், மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் உள்ளிட்ட பல தலைவர்கள் உலக மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் முடிவு இந்த மாநாட்டின் இறுதியில் ஏற்படாமலே போகலாம் என்று எச்சரித்துள்ளனர்.

தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையில் இந்த மாநாட்டில் காணப்படும் பரஸ்பர நம்பகமற்ற தன்மையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.



இந்த மாநாட்டை நடத்தும் டேனிஷ் அரசின் நடவடிக்கையும் இந்த பிளவை மேலும் அதிகப்படுத்தியது என்று கூறலாம். அதாவது கடந்த ஒரு ஆண்டு காலமாக சர்வதேச மட்டத்தில் விவாதிக்கப்பட்டுவந்த மாநாட்டு இறுதி ஒப்பந்தத்தின் நகலுக்கு மாற்றாக, டேனிஷ் அரசு தயாரித்து வைத்த நகல் அறிக்கையை மற்றைய நாடுகள் மீது திணிப்பதற்கு டேனிஷ் அரசு செய்த முயற்சிகள் சிக்கலை மேலும் அதிகப்படுத்தி விட்டது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter