>> Thursday, December 10, 2009

புதுமாத்தளனில் இறந்த படையினருக்கான நினைவுத் தூபியை இலங்கை ஜனாதிபதி திறந்து வைத்தார்

இலங்கை அரசினால் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக வன்னிப் பகுதிக்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி அங்கு போர் நினைவுத் தூபி ஒன்றை திறந்து வைத்துள்ளார்.

போரினால் இடம்பெயர்ந்தவர்களுக்கான மனிக்பாம் இடைத்தங்கல் முகாமுக்கும் இன்று புதன்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதியுடன் இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் மீளக்குடியமர்த்தப்பட்டுவிடுவார்கள் என்பதை மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.

மடுத் தேவாலயத்திற்கும் முதற்தடவையாகச் சென்ற அவர் அங்கு இடம்பெற்ற விசேட வழிபாட்டில் கலந்து கொண்டார்.

விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே இறுதிச் சமர் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதிக்குச் சென்ற அவர் அங்கு போரினால் உயிரிழந்த படைவீரர்களுக்கான நினைவுத் தூபி ஒன்றினையும் திறந்து வைத்திருக்கின்றார்.

புதுமாத்தளன் நினைவுத்தூபி, ஆயுத கிளர்ச்சி இறுதியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைக் குறிக்குமே ஒழிய, அதனை தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதை குறிக்கும் ஒன்றாகக் கொள்ள முடியாது என்று இலங்கை தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதன் குறிப்பிட்டார்.

அதேவேளை, இந்தப் போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் நினைவிடம் ஒன்றை அமைப்பது குறித்தும் தான் அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


டெல்லியில் இலங்கை தூதுக்குழு


இந்திய வெளியுறவு அமைச்சருடன் கோத்தாபாய மற்றும் பசில் ராஜபக்ஷ ( ஆவணப்படம்)
இலங்கையிலிருந்து மூன்று உயர் அதிகாரிகளைக் கொண்ட பிரதிநிதிகள் குழு ஒன்று புதனிரவு புதுடெல்லி வந்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபஷ, ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோரை அந்தக் குழுவினர் வியாழக்கிழமையன்று சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளனர்.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுற்றிருக்கும் நிலையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.

தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காக, இந்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் 500 கோடி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. இந்த நிலையில், அங்கு நடைபெறும் மீள்குடியேற்றம் தொடர்பாக இந்தியாவிடம் எடுத்துரைக்கவும், மறுவாழ்வுத் திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கவும் இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக, இலங்கையில் ஜனவரி இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



--------------------------------------------------------------------------------


கச்சதீவு ஒப்பந்தம் மீறப்படுவதாக கருணாநிதி குற்றச்சாட்டு


முதல்வர் கருணாநிதி
இலங்கையுடனான கச்சத்தீவு ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் மீறப்படுவதாகக் தமிழக முதல்வர் கருணாநிதி குறை கூறியிருக்கிறார்.

கச்சத்தீவு ஒப்பந்தம் முடிந்துபோன ஒன்று, மறு பரிசீலனை செய்யமுடியாது என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கச்சத்தீவு அருகாமையில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கோ, அங்கே யாத்திரை செல்வதற்கோ எவ்வித இடையூறும் அளிக்கப்படக்கூடாது என்று ஒப்பந்தத்தில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் பின்னர் உருவான நெருக்கடி காலகட்டத்தில் அவை குறித்த ஷரத்துக்களை இலங்கை அரசு திரும்பப்பெற்றதாக செய்திகள் வெளியாயின என்று கருணாநிதி கூறினார்.

அத்தகைய செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில் அண்மை நிகழ்வுகள் இருக்கின்றன, இந்நிலை தொடரக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.



--------------------------------------------------------------------------------


'இந்திய அரசபடை- மாவோயிஸ்ட் இடையேயான மோதல்களால் சிறார் கல்வி பாதிப்பு'- ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்


இந்திய மாவோயிஸ்டுகள்
இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையிலான மோதல்களால் இந்தியாவின் விளிம்பு நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிறார்களின் கல்வி பாதிப்புக்கு உள்ளாவதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்டியங்கும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறுகிறது.

கிராமப்புறங்களில் உள்ள பள்ளிக்கூடங்களை இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின் சின்னமாக பார்க்கும் மாவோயிஸ்ட்டுகள், அவற்றை தாக்குவதை நிறுத்த வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியுள்ளது.

அரசாங்கப் படைகள் பள்ளிக்கூடங்களில் தளமமைப்பதால், அவை தாக்குதல் இலக்காவதாகக் கூறி, படைகள் பள்ளிக்கூடங்களைத் தாக்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter