>> Monday, December 14, 2009

கோட்டாபய ராஜபக்ஷ போர் குற்றங்களுக்கு உத்தரவிட்டார் - சரத் பொன்சேகா

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டிருந்தார் என இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைவரும், வரவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களில் ஒருவருமான ஜெனரல் சரத் ஃபொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் கடந்த மேமாதம் முடிவுக்கு வந்த வேளையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டுமே ஒழிய அவர்கள் சரணடைய இடம்தரக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது பாதுகாப்புச் செயலர் கோட்டாபயதான் என்று ஜெனரல் ஃபொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

யுத்தம் நடந்த சமயத்தில் களத்தில் நின்ற இராணுவத் தளபதிகளுடன் தொடர்பில் இருந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள் மூலம் தனக்கு இந்த விபரங்கள் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


சென்னைக்கு வரும் கிருஷ்ணா நீர் தடுத்து நிறுத்தம்


ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதியை பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு இந்திய நடுவணரசு ஒப்புக்கொண்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நீடித்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னைக்கு கிருஷ்ணா நீர் அளிக்கும் அணையின் கதவுகளை ஆர்ப்பாட்டகாரர்கள் மூடியிருக்கிறார்கள். அதே சமயம் தாங்கள் பதவி விலகுவதாக சனிக்கிழமையன்று அறிவித்த 20 அமைச்சர்கள் ஆந்திர முதல்வர் ரோசைய்யா அவர்களின் வேண்டுகோளையடுத்து தங்களது முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்துள்ளார்கள்.



--------------------------------------------------------------------------------


தமிழகத்தை பிரிக்கும் எண்ணத்திற்கு இடமில்லை - தமிழக முதல்வர்


தமிழக முதல்வர் கருணாநிதி

தெலுங்கானா விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, தாமதமான முடிவும், அதை தொடர்ந்து அவசரமான முடிவையும் எடுக்க கூடாது என்பது புரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் சிலரும் தமிழகத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கூறுவது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதி, திமுகவுக்கு அப்படி ஒரு கருத்து இல்லை என்றும், தமிழக மக்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, தமிழகத்திற்கும், ஆந்திரப் பிரதேசத்திற்கும் இடையிலான போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter