>> Thursday, December 17, 2009

இலங்கையில் இணக்கப்பாடு ஏற்படுவது மிகவும் முக்கியம் என்று பிரிட்டன் கூறுகிறது


மஹிந்த ராஜபக்ஷ-டேவிட் மிலிபாண்ட்( பழைய படம்)
இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கும் இடையே ஒரு உண்மையான இணக்கப்பாடு ஏற்படுவது மிகவும் முக்கியம் என்றும், அங்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இடம் பெயர்ந்த மக்கள் அனைவரும் வாக்களிக்க வழி செய்யப்பட வேண்டும் என்றும் பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபாண்ட் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலவரம் தொடர்பாக நேற்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த ஒரு பதிலேயே இதை அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடைத்தங்கல் முகாம்களில் இருந்த மக்கள் சுதந்திரமாக நடமாடலாம் என்று இலங்கை அரசு அறிவித்துள்மை சாதகமான முன்னேற்றம் என்றும் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் மனிதநேயப் பணியாளர்களுக்கு இடைத்தங்கல் முகாம்களுக்கு சென்று வரவும், முன்னாள் போராளிகளை சந்திக்கவும் முழுச் சுதந்தம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் அனைத்து சமூகங்களின் நியாயமான கோரிக்கைகளும் அபிலாஷைகளும் நிறைவேறும் வகையில் எல்லா விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் வகையில் இலங்கை அரசுடனும் சர்வதேச சமூகத்துடனும் நேரடியாக பிரிட்டிஷ் அரசு இணைந்து செயற்படும் என்றும் டேவிட் மிலிபாண்ட் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடக்க வேண்டும்


மஹிந்த ராஜபக்ஷ-சரத் பொன்சேகா
இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலும் அதை அடுத்து நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலும் சுதந்திரமாகவும், முறைகேடுகள் இல்லாமலும் நம்பகத்தன்மையுடனும் நடக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் டேவிட் மிலிபாண்ட் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு நடவடிக்கைதான் அனைத்து சமூகத்தின் நம்பிக்கையையும் பெற்று நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் எதிர்காலத்தில் தங்களுக்கும் ஒரு பங்கு உள்ளது என்று கருதுபவர்கள் அனைவரும், அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கபடுவதற்கு பங்காளிகளாக இருந்து உடன்பட வேண்டியது மிகவும் அவசியமானது என்றும் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.

அங்கு உள்நாட்டு மோதல் ஏன் ஏற்பட்டது என்பதனை அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டியதும் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் ஐரோப்பிய ஆணையம் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து இலங்கை அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் அந்நாட்டிடம் தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும் டேவிட் மிலிபாண்ட் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.



--------------------------------------------------------------------------------


மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும்-அமெரிக்கா


அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணைச் செயலர் பிலிப் க்ராலி

இலங்கையில் விடுதலைப் புலிகளுடான போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை நடத்தியுள்ள விசாரணைகள் குறித்து தாங்கள் அறிந்துள்ளதாகவும் அதை தாங்கள் ஆதரிப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணைச் செயலர் பிலிப் ஜே க்ராலி நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது இதை தெரிவித்தார்.

ஐ நா வின் விசாரணை அறிக்கைக்கு ஆதரவை தெரிவித்துள்ள அமெரிக்கா, இலங்கையில் இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வருவதின் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் ஊடகங்கள் அச்சுறுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா கோரியுள்ளது.

மேலும் அங்கு முன்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்துகிறது என்றும் அமெரிக்க அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலர் பிலிப் ஜே க்ராலி தெரிவித்துள்ளார்.



--------------------------------------------------------------------------------


சிவாஜிலிங்கத்தின் முடிவு தனிப்பட்டது என்று டெலோ கூறுகிறது


தா தே கூ உறுப்பினர் சிவாஜிலிங்கம்
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சுயேச்சையாக போட்டியிட எடுத்துள்ள முடிவு அவரது தனிப்பட்ட முடிவு என்றும் டெலோ அமைப்பின் முடிவு அல்ல என்றும் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்னமும் தமது முடிவை வெளிப்படுத்தாமல் இருப்பது தமிழ் மக்களிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் செல்வம் அடைக்கலநாதன் கூறுகிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இது தொடர்பிலான முடிவை எடுப்பதில் காலதாமதமாவது தமிழ் மக்களை சங்கடப்படுத்தும் நிலைக்கு தள்ளும் என்று தான் கருதுவதாகவும் அந்தக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இம்மாதம் 19 ஆம் அல்லது 20 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் குறித்த நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெளியிடக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.



--------------------------------------------------------------------------------


சுற்றுச்சூழல் மாசடைவதை காற்றாலை மின்சாரம் தடுக்கும்
மின்சாரம் தயாரிக்கும் காற்றாலைகள்

காற்றிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம்தான் வெப்பமயமாதலின் பின் விளைவுகளிலிருந்து உலகைக்காக்கும் வழியாகப் பார்க்கப்படுகிறது.

நிலக்கரியிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்துகிறது.

காற்றாலை மின் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருப்பதாகவும் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அகில இந்திய அளவில் கடன், வரிச்சலுகை இவற்றின் மூலமாக காற்றாலை மின் உற்பத்தியை மத்திய அரசு வளர்த்தெடுக்க முடிந்ததென்றால், தமிழகத்தைப் பொறுத்தவரை மாநில அரசுகள் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கிக்கொள்வதிலும், உற்பத்தியாளர் தேவைகளை நிறைவேற்றுவதிலும் தொடர்ந்து ஈடுபாடு காண்பித்து வந்ததால்தான் மாநிலம் இத்துறையில் முன்னிலை வகிக்க முடிகிறது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

காற்றிலிருந்து மின்சாரம் என்றாலும் எல்லா இடத்திலும் உற்பத்தி செய்துவிடமுடியாது. ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் வீசும் இடங்களில்தான் காற்றாலைகளை நிறுவமுடியும். தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளிலேயே அந்த வேகத்தில் காற்று வீசுகிறது.

அத்தகைய பகுதிகளில் உற்பத்திசெய்யக்கூடிய வாய்ப்பில் 75 சதத்தினை ஏற்கெனவே முற்றிலுமாகப் பயன்படுத்திக்கொண்டிருப்பதாக, இனி செல்லக்கூடிய தூரம் அதிகம் இல்லை என்றும் கூறுகிறார் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் கனகசபை.

சூரிய ஒளியில் தான் எதிர்காலம்?


சூரிய ஒளியை பயன்படுத்தும் ஒரு இந்திய கிராம மக்கள்
எரிசக்தித் துறையினைப் பொறுத்தவரை இந்தியாவின் எதிர்காலம் சூரிய ஒளியைப் பயன்படுத்துவதில்தான் இருக்கிறது, ஆனால் தளவாடங்களின் விலையைக் கட்டுப்படுத்தி மக்கள்டையே அந்தவகையில் மின்சாரத்தைப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான் அவ்வழியில் வெற்றி காணமுடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter