>> Tuesday, August 31, 2010
தினமலருக்கு எதிராக தமிழக அரசு நோட்டீஸ்
தமிழக அரசின் கலைஞர் வீட்டு வசதித் திட்டம் குறித்தும் முல்லைப் பெரியார் அணை பிரச்சினை குறித்தும் தமிழ் நாளேடான தினமலர் தவறான தகவல்கள் வெளியிட்டிருப்பதாக தமிழக அரசு புகார் கூறியுள்ளது.
அச்செய்திகள் குறித்து விளக்கம் கேட்டு அந்நாளேட்டிற்கு தாக்கீது அனுப்பப்பட்டிருக்கிறது.
கலைஞர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டித் தரப்படும் வீடுகளின் அளவைக் குறைத்தும், தவிர அளவை அடிக் கணக்கில் காட்டாமல் மீட்டர் கணக்கில் காண்பித்து வீட்டின் அளவு மிகக்குறைவாக இருப்பதுபோல் ஒரு பிரமையை ஏற்படுத்தவும் அந்நாளேடு முயற்சித்திருக்கிறது என்று தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது.
இந்த வீடுகள் கட்டுவதற்காக தற்போது ஏழை மக்கள் வசிக்கும் குடிசைகள் பிரித்துப்போடப்பட்டு அவர்கள் ஒண்டுவதற்குக் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று உண்மைக்கு புறம்பாக தினமலர் செய்திவெளியிட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
முல்லைப் பெரியார் பிரச்சினையை ஆராயவென உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் குழுவில், தமிழகத்தின் சார்பாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லஷ்மணன் செயல்பட்டுக் கொண்டிருக்கையில் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் தமிழகத்தின் வழக்கறிஞரும் எவரும் பங்குபெறாததால் மாநிலத்திற்கு ஏதோ பின்னடைவு ஏற்பட்டுவிட்டதைப் போன்று உண்மைக்குப் புறம்பாக தினமலர் செய்தி வெளியிட்டிருக்கிறது என்றும் அரசு கூறியுள்ளது.
இவையெல்லாம் அரசுக்கு அவப்பெயர் உருவாக்குவதற்காக திரித்து வெளியிடப்பட்ட செய்திகள், அவற்றை திரும்பப் பெறவேண்டும் என் அரசின் தாக்கீது கூறுகிறது.
அப்படி திரும்பப் பெறாவிட்டால் அதன் மீது வழக்கு தொடரப்படும் என அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment