>> Saturday, August 21, 2010


வெள்ளத்தால் முழ்கிய ஊர்

இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் ஏற்றது
பாகிஸ்தானில் கடும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு உதவ இந்தியா அளித்த 5 மில்லியன் டாலர் உதவியை ஏற்றுக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

வரலாறு காணாத பெரும் வெள்ளத்தால் பாகிஸ்தான் பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகிறது. இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டின் வட பகுதியில் ஆரம்பித்த பெரும் மழை நாள்கள் செல்லச் செல்ல நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளிலும் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட காரணமாக அமைந்தன.

இந்த வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,600 ஆக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் 2 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடிழந்துள்ளனர்.

பலவிதமான நோய்கள் பரவி பெரும் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்ற அச்சமும் அங்கே நிலவுகிறது. நிலைமையை சமாளிக்க பாகிஸ்தான் அரசு சர்வதேச உதவியை கோரியுள்ளது.

ஆனால் ஐ நா வின் மூலம் கோரப்பட்ட சர்வதேச நிவாரண நிதிக்கு முழு ஆதரவு கிடைக்கவில்லை. இது பற்றி வியாழக்கிழமை அமெரிக்காவில் நடைபெற்ற கூட்டத்தில், பிரிட்டன் தான் அளிக்கும் உதவியை இரட்டிப்பாக்குவதாக தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இந்தியா, 5 மில்லியன் டாலர்களை அளிக்க ஒரு வாரத்துக்கும் முன்பே முன்வந்தது. இதை ஏற்பது குறித்து பாகிஸ்தான் எவ்வித முடிவையும் தெரிவித்திருக்கவில்லை.

இந்நிலையில் இரு நாட்டுப் பிரதமர்களும் சில தினங்களுக்கு முன் தொலைபேசியில் உரையாடினர். இதையடுத்து அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரைஷி இந்தியாவின் உதவியை ஏற்போம் என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இந்த அறிவிப்பு வருவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அரசுத் துறைப் பேச்சாளர், இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் ஏற்கும் என்றே அமெரிக்கா எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

இயற்கை பேரிடர் சம்மந்தப்பட்ட விடயங்களில் அரசியலுக்கு இடமில்லை என்று அரசுத் துறைப் பேச்சாளர் பி ஜே கிரவ்லி கூறியிருந்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter