>> Friday, August 27, 2010


பாக்.: புதிய வெள்ள அபாயம்
ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
பாகிஸ்தானின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தில் இன்னொரு பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுக்கும் உடனடி அபாயம் ஏற்பட்டுள்ளதென்று பாகிஸ்தானின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அங்கே சிந்து நதி பெருக்கெடுத்து பல இடங்களில் கரை உடைத்து ஓடுகிறது.

ஐ.நா. கவலை

வட மேற்குப் பாகிஸ்தானில் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பத்து லட்சம் பேருக்கு வான் வழியாக மட்டுமே சென்று வெள்ள நிவாரணம் வழங்க முடியும் என்ற நிலை உருவாகியிருப்பதால், கூடுதல் ஹெலிகொப்டர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறது என்றும் அப்போதுதான் அத்தியாவசியமானப் பொருட்களை வாடும் மக்களுக்கு வழங்க முடியும் என்றும் ஐ.நா. மன்றம் தெரிவித்துள்ளது.

உணவு தேவைப்படுவோரில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மட்டுமே தங்களால் உணவு உதவிகளை வழங்க முடிந்துள்ளது என்று ஐ.நா. மனிதாபிமானப் பணிகள் சார்பாகப் பேசவல்லவரான மௌரிஸியோ ஜியூலியானோ கூறியுள்ளார்.


அறுபது லட்சம் பேருக்கு உணவு தேவைப்படுகிறது. ஆனால் இருபது லட்சத்துக்குக்ம் குறைவானவர்களுக்கே எங்களால் இதுவரையில் உணவு உதவிப் பொருட்களை கொண்டு சேர்க்க முடிந்துள்ளது. ஆகவே எம்முடைய உணவு உதவி கிடைக்காதவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.

ஐ.நா. அதிகாரி

தொண்டு ஊழியர்கள் மீது தாக்குதல் அச்சுறுத்தல்

இதனிடையே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சர்வதேச தொண்டு நிறுவன ஊழியர்களை இலக்குவைத்து தாக்க தீவிரவாதிகள் திட்டமிடுவதாக எச்சரிக்கை வந்துள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த எச்சரிக்கையின் விளைவாக பாகிஸ்தானில் நிவாரணப் பணி செய்து வரும் ஐ.நா. அமைப்புகள் தமது பாதுகாப்பு சூழ்நிலையை மீளாய்வு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

தெஹ்ரீக்-இ-தாலிபான் என்ற அமைப்பிடம் இருந்து நிவாரணப் பணியாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் அதிக வன்முறையும் கடும்போக்கும் நிறைந்த ஒரு ஆயுதக் குழு இதுவாகும்.

தொண்டு நிறுவனங்கள் தம்முடைய பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக்குவார்களேயானால் அது நிவாரணங்களை விநியோகிப்பதில் அவர்களுக்குள்ள வல்லமையையும் வேகத்தையும் வெகுவாக பாதித்துவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter