>> Thursday, August 5, 2010
மெர்வின் செயலுக்கு ரணில் கண்டனம்
இலங்கை அரசின் அமைச்சர் மெர்வின் சில்வா ஒரு அரசு அதிகாரியை மரத்தில் கட்டி வைத்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதிகாரியை மரத்தில் கட்டி வைத்தார் அமைச்சர் மெர்வின் சில்வா என்று சர்ச்சை
இந்த அராஜகத்தை கண்டித்துள்ள அரசு அதிகாரிகள் நாளை, வியாழக்கிழமை அன்று நாடு தழுவிய அளவில் ஒரு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
நாட்டில் கொசுவினால் ஏற்படும் டெங்கு நோயை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் அந்த அரசு அதிகாரி கலந்து கொள்ளாத காரணத்தாலேயே அவரை அமைச்சர் தண்டித்துள்ளார்.
டெங்கு நோய் காரணமாக இந்த ஆண்டு இலங்கையில் பலர் பலியாகியுள்ளனர்.
அமைச்சர் மெர்வின் சில்வாவின் இந்த செயல் நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் ஒரு செயலாகும் என்று ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
தெரிந்தே ஒருவருக்கு பாதகம் செய்வது இலங்கை அரசியல் சாசனத்தின்படி தவறு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மெர்வில் சில்வாவை கண்டித்து நாட்டிலுள்ள்ள பொதுத்துறை தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்னர் போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
மேலும், அமைச்சர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை தாங்கள் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அமைச்சர் சில்வாவின் நடவடிக்கை கட்சியில் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார், ஆனால் கூடுதல் கருத்துக்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
ஒரு மாமரத்தில் அந்த அதிகாரி அமைச்சரால் கட்டி வைக்கப்பட்ட படங்கள் உள்ளூர் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
அவரை மரத்தில் கட்டி வைத்த சம்பவம் சுமார் பத்து நிமிடங்கள் நீடித்தது.
தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தாலேயே தாம் டெங்கு நோய் ஒழிப்பு தொடர்பான நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என அந்த அதிகாரி கூறுகிறார்.
டெங்கு இலங்கையில் "பெரும் பிரச்சினை"
கொசுவாலேயே டெங்கு ஏற்படுகிறது
தேங்கி நிற்கும் தண்ணீரில் இனப்பெருக்கும் செய்யும் கொசுக்களின் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் இலங்கையில் ஒரு பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் டெங்கு காய்ச்சலால் 160 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர், 22,000 பேருக்கும் கூடுதலானவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும், தொழிற்சங்கங்கள் இந்த விடயம் தொடர்பில் அமைச்சரின் நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது எனக் கூறி கண்டித்துள்ளன.
சில்வாவும் சர்ச்சைகளும்
நெடுஞ்சாலைகள் துறையின் துணை அமைச்சரான மெர்வின் சில்வா, முன்னர் இலங்கையில் தேசிய தொலைக்காட்சி நிலையத்துக்குள் தனது ஆதரவாளர்களுடன் புகுந்து மோதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.
பின்னர் அவரை அங்கிருந்து வெளியேற்றும் சூழல் ஏற்பட்டது.
இலங்கை அரசியிலில் ஒரு பெரும் சர்ச்சைக்குரிய நபராகவே மெர்வில் சில்வா இருந்து வருகிறார்.
சர்ச்சை அவரது பெயருடன் இணைந்துள்ளது என்பதற்கு அவரது இந்த மாமர நடவடிக்கை மேலும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
0 comments:
Post a Comment