>> Monday, August 16, 2010
வெற்றிலை விவசாயிகள் பாதிப்பு
கடும் சிரமத்தை எதிர்நோக்குவதாக வெற்றிலை சாகுபடியாளர்கள் கவலை
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வெற்றிலை செய்கைக்கு பெயர் பெற்றுள்ள மட்டக்களப்பு களுதாவளை கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிலை செய்கையாளர்கள் உள்நாட்டு யுத்தம் முடிந்து ஒரு வருடம் கடந்து விட்ட போதிலும் தொடர்ந்தும் தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
வெற்றிலைக் கொடி படர விடப்படும் அலம்பல் வகை தடிகளை காட்டில் வெட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை, நியாய விலைக்கு சந்தைப்படுத்தல் வாய்பின்மை போன்ற காரணங்களினாலலேயே தாம் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக வெற்றிலைச் செய்கையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றார்கள்.
தங்களுடைய மூதாதையர் விட்டுச் சென்ற பரம்பரை தொழிலான வெற்றிலைச் செய்கை இப்போ தங்களது வாழ்வாதாரமாகி விட்டதாகக் கூறும் 40 வயதான அரசரத்தினம் மனோகரன், மாதமொன்றிற்கு அரசாங்க ஊழியர்கள் சம்பளம் பெறுவதைப் போன்று தங்களால் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபா வரை சம்பாதிக்கமுடியும் என்று கூறுகிறார்.
தங்கள் கிராமத்தைப் பொறுத்த வரை அரசாங்கத்தில் உத்தியோகம் வகித்தாலும் அவர் கூட வெற்றிலைத் தோட்டமொன்றின் உரிமையாளராகத்தான் இருப்பார் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
வெற்றிலைச் செய்கையாளர்களைப் பொறுத்த வரை இப்போது எதிர் நோக்குகின்ற முக்கியமான பிரச்சினை காடுகளுக்கு சென்று அலம்பல் வகை மரங்களை சட்ட ரீதியாக எடுத்து வர முடியாதா நிலையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்
வன பரிபாலன தினைக்கள அதிகாரிகள் அலம்பல் வகை மரங்களான காயான், பன்னல், பாவட்டை, உளுமுந்தை ஆகிய மரங்களை வெட்டுவது காடழிப்பு என குற்றம் சுமத்துகின்றார்கள்.
இது தொடர்பாக சிவில் அதிகாரிகளின் கவனத்திற்கு தங்களால் பல தடவைகள் கொண்டு வரப்பட்ட போதிலும் அவர்களால் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் எதுவும் இது வரை நிறைவேற்றப்படவில்லை என தனது கவலையை வெளியிட்டார்.
தங்களுக்கு உரிய சந்தைப்படுத்தல் வாய்ப்பின்மையால் தங்களை விட இடைத் தரகர்களே கூடுதல் லாபம் பெறுவதாக சுட்டிக் காட்டும் 34 வயதான மதன் அரசாங்கம் நெல்லுக்கு உதத்தரவாத விலை நிர்ணயிப்பது போல் வெற்றிலைக்கும் நிர்ணயிக்க வேண்டும் என்கின்றார்.
0 comments:
Post a Comment