>> Friday, August 20, 2010



"இலங்கையில் எனக்கு நீதி கிடைக்காது"

இலங்கை அரசாங்கம் விரைவில் தன்னை சிறையில் அடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக இலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டதற்காக அரசாங்கம் தன்னைப் பழிவாங்கப் பார்க்கிறது என்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

தன்னை சிறையில் அடைத்து தனது அரசியல் எதிர்காலத்தை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் திட்டமிடுகிறது என்று பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

இராணுவ வீரர்களால் வியாழனன்று நாடாளுமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்த சரத் ஃபொன்சேகா, தன்னை அரசாங்கம் சிறையில் அடைக்கப்போகிறது என்று கூறினார்.

இலங்கையின் நீதித்துறை மீது தனக்கு நம்பிக்கையில்லையென்றாலும், தன் மீது விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து தான் மேல்முறையீடுகள் செய்யப்போவதாக அவர் தெரிவித்தார்.

"எங்கு போய் முறையிட்டாலும் எனக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பது எனக்கு நூறு சதவீதம் தெரியும். அது பற்றி எங்களுக்கு கவலையில்லை. எது வந்தாலும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்", என்றார் அவர்


பாதுகாப்புச் செயலரின் மனோபாவம் எப்படிப்பட்டது என்று எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் எப்படி பதில் தருவார்கள், அவர்கள் எப்படிப் பழிவாங்குவார்கள், அவர்கள் எனக்கு என்னவெல்லாம் செய்வார்கள் என்பது பற்றி யோசித்த பின்னர்தான் நான் எனது இராணுவச் சீருடையே களைந்திருந்தேன்.


சரத் பொன்சேகா

கடந்த ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து இரண்டு வாரங்கள் கழித்து கைதுசெய்யப்பட்டிருந்த ஃபொன்சேகா இராணுவத் தடுப்புக் காவலில் இருந்து வருகிறார்.

தேசதுரோகம் தொடங்கி ஊழல் வரையில் என்று பல விதமான குற்றச்சாட்டுகளின் பேரில் இராணுவ நீதிமன்றத்திலும் சிவில் நீதிமன்றங்களிலும் அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நடந்துவருகின்றன.

இராணுவத்தில் இருந்தபோதே அரசியலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ நீதிமன்றத்தில் நடந்த முதல் வழக்கில் குற்றம் உறுதிசெய்யப்பட்டு தண்டனையாக சரத் ஃபொன்சேகாவின் இராணுவ அந்தஸ்துகளும் பதக்கங்களும் அண்மையில் பறிக்கப்பட்டிருந்தன.

இராணுவத்தில் இருந்த சமயத்தில் ஊழலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் மீதான இரண்டாவது இராணுவ நீதிமன்ற வழக்கின் அடுத்த விசாரணை வரும் சனிக்கிழமை நடக்கவுள்ளது.

இராணுவத்தை விட்டு ஓடிப்போனவர்களைப் பயன்படுத்தினார், தேச இரகசியங்களை வெளியில் கசியவிட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் அவர் மீது உள்ளது. இவற்றில் சில குற்றங்களுக்கு இருபது ஆண்டுகள் வரையில்கூட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter