>> Monday, August 30, 2010



அணுகுண்டுப் பரிசோதனை தடை தினம்



அணுகுண்டு புகை மண்டலம்
அணுகுண்டுப் பரிசோதனைக்கு எதிரான முதலாவது சர்வதேச தினத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகஸ்ட் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கின்றது.

பல தசாப்தங்களாக நடத்தப்பட்டுள்ள அணுகுண்டுப் பரிசோதனைகள் மூலம் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் விளைவிக்கப்பட்டுள்ள கெடுதல்கள் குறித்த கவனத்தை ஈர்க்கும் நோக்குடனும் பரிசோதனைத் தடைக்கான பரந்துபட்ட உடன்படிக்கைக்கு ஆதரவை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்தும் பிரசாரத்திற்கு இந்த நிகழ்வு மேலும் உந்துசக்தியாக அமையும் என ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூன் நம்புகின்றார்.

சோவியத் யூனியனின் முதலாவது அணு குண்டு பரிசோதனை நிலையமாக பயன்படுத்தப்பட்டுவந்த மத்திய ஆசியாவிலுள்ள குடியரசான கஸக்ஸ்தானே, 61 ஆண்டுகளுக்கு முன்னர், அணுகுண்டுப் பரிசோதனைக்கான இந்த உலகளாவிய தினத்தை முன்மொழிந்தது.

இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட சுமார் 456 பரிசோதனைகள் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் அளவு மட்டும் ஜெர்மன் நாட்டின் மொத்த பரப்புக்கு சமமானது.

அங்கு சுமார் ஒன்றரை மில்லியன் மக்கள் உயிர் மற்றும் சுகாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச உடன்படிக்கை முயற்சியில் தடைகள்

1950ம் ஆண்டு முதல் 20ம் நூற்றாண்டின் இறுதிவரை ஆஸ்திரேலியா முதற்கொண்டு பசுபிக் தீவுகள் மற்றும் அமெரிக்காவிலுள்ள நெவாடா வரையுமான பிரதேசங்களில் தரைக்கு மேலும் தரைக்கடியிலும் கடலுக்கடியிலும் என ஆயிரக்கணக்கான அணுகுண்டுகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.



கஸக்ஸ்தான் எல்லை வரைபடம்
உலகிலுள்ள 150 இற்கும் அதிகமான நாடுகள் அணுகுண்டுப் பரிசோதனைத் தடைக்கான பரந்துபட்ட உடன்படிக்கையை அங்கீகரித்துள்ள போதிலும் சில நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா, பாகிஸ்தான்,
இஸ்ரேல், இரான் மற்றும் வடகொரியா உள்ளிட்ட நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றமை அந்த உடன்படிக்கை அமலுக்கு வருவதில் பெரும் தடையாக இருந்து வருகின்றது.

அணு ஆயுதங்களைக் களைவதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதெல்லாம் இந்த நாடுகளே பல ஆண்டுகளாக அந்த முயற்சிகளுக்கு தடைக்கற்களாக இருந்து வருகின்றன.

தனது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக அணு ஆயுதக் களைவை வலியுறுத்திவரும் ஐநாவின் தலைமைச் செயலர் பான் கீ மூன், பரிசோதனைத் தடை உடன்படிக்கையை 2012ஆம் ஆண்டளவில் அமுலுக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றார்.

இதன்பொருட்டு ஐநாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அணு ஆயுதக்களைவு உச்சி மாநாடு ஒன்றுக்காக உடன்படிக்கையின் உறுப்பு நாடுகளுக்கு பான் கீ மூன் அழைப்பு விடுத்துள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter