>> Monday, August 30, 2010
பந்தய ஊழல் சர்ச்சையில் பாக். வீரர்கள்
பந்தய ஊழல் ஒன்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இங்கிலாந்தை எதிர்த்து பாகிஸ்தான் அணி தற்சமயம் லண்டனில் விளையாடி வருகின்ற டெஸ்ட் ஆட்டம் தொடர்பாக எழுந்துள்ள இந்தப் பந்தய ஊழல்
குற்றச்சாட்டு சம்பந்தமாக ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் வீரர்கள் பந்து வீசும் போது குறிப்பிட்ட நேரத்தில் அவர்களை நோ-பால் வீச வைப்பதாக ஏற்பாடு செய்தமைக்காக அந்த நபருக்கு பெருந்தொகையான பணம் கொடுத்திருந்ததாக பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று கூறுகிறது.
லார்ட்ஸில் தற்போதைய ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முதல் நாள் இரவு, தமது நிருபர் ஒருவர் பந்தயத் தரகர் போல நடித்து, பாகிஸ்தான் அணியோடு தொடர்புடையவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவருக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பவுண்டுகள் பணம் கொடுத்திருந்ததாக நியூஸ் ஆஃப் த வொர்ல்ட் பத்திரிகை கூறுகிறது.
அதற்குப் பிரதிபலனாக ஆட்டத்தில் குறிப்பிட்ட இடங்களில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை நோ-பால்கள் வீசவைக்க ஏற்பாடு செய்வதாக அந்த நபர் உத்திரவாதம் அளித்திருந்தார்.
அவர் சொன்னது போலவே நடந்தது. அவர் குறிப்பிட்ட அந்த மூன்று கட்டங்களில் பாகிஸ்தான் வீரர்கள் நோபால்களை வீசியிருந்தனர்.
முகம்மது ஆஸிப் மற்றும் முகம்மது ஆமிர் மீது விசாரணைகள்
பாகிஸ்தான் அணி வீரர்கள்(ஆவணம்)
பாகிஸ்தான் அணி வீரர்கள்(ஆவணம்)
ஆட்டத்தின் இது போன்ற உட்தகவல்கள் தற்போது பந்தயம் கட்டும் தொழில் நடத்துவோருக்கு மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கிறது. ஏனென்றால் ஆட்டத்தின் இறுதி முடிவு பற்றி மட்டுமல்லாது இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்கள் சம்பந்தமாகவும் அவர்கள் மக்களைப் பந்தயம் கட்ட வைத்து பணம் சம்பாதிக்க முடியும்.
ஆனால் விளையாட்டு வீரர்களைப் பொறுத்தமட்டில் ஆட்டத்தின் எந்த ஒரு அம்சத்திலும், விளைவை முன்கூட்டியே தீர்மானித்து பொய்யாக அவர்கள் விளையாடுவது முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் முகம்மது ஆஸிப் மற்றும் முகம்மது ஆமிர் ஆகியோர் தற்போது இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
விசாரணைகள் நடக்கின்றன என்றாலும் ஆட்டம் தொடர்ந்து நடக்க சர்வதேச கிரிக்கெட் சபை அனுமதி அளித்திருந்தது.
லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகின்ற ஆட்டத்தின் இறுதி முடிவைப் பாதிக்கக்கூடிய எந்த ஒரு விடயத்திலும் எந்த ஆட்டக்காரரும் சம்பந்தப்பட்டிந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவது நாளில் தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த பாகிஸ்தான் வீரர்கள் 147 ரன்களில் ஆட்டம் இழக்கவே, இங்கிலாந்து 225 ரன்களில் ஆட்டத்தை வென்று டெஸ்ட் தொடரையும் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்த சம்பவம் கிரிக்கெட் ஆட்டத்தின் மீது மீண்டும் கருநிழலை படியச் செய்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment