>> Tuesday, August 17, 2010
பொன்சேகா மீது மேலும் ஒரு வழக்கு
இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, இராணுவத்தில் இருந்து ஓடியவர்களை தனது ஜனாதிபதி தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக சேர்த்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொன்சேகாவின் செயலர் கேப்டன் செனக டி செல்வாவும் இதில் குற்றம்சாட்டுப்பட்டுள்ளார்.
இராணுவத்தில் இருந்து ஒடிய 10 பேரை சட்ட விரோதமாக சேர்த்துக்கொண்டார், அவர்களுக்கு உறைவிடமும் பணமும் அளித்தார், அரசுக்கு எதிராக இராணுவப் புரட்சி செய்யும் முயற்சியில் அவர்களைப் பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வழக்குகளை சந்திக்கும் பொன்சேகா
இராணுவத்தில் இருந்து ஓடியதாகக் கூறப்படும் இந்த 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் இராணுவ செயல்பாடுகள் இயக்ககுனரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரின் அறிக்கைகளை குற்றப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்காக இராணுவத்தில் இருந்து ஓடியவர்களை சேர்க்க பொன்சேகாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்க வில்லை என்று இவர்கள் கூறியிருந்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்த பொன்சேகாவையும், அவரது செயலரையும் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment