>> Friday, August 27, 2010


அன்னை தெரசா நூற்றாண்டு விழா தொடங்கியது

அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் 26.8.2010 அன்று ஒரு சிறப்பு வழிபாட்டுடன் தொடங்கியுள்ளன.

கொல்கத்தாவில் அன்னை தெரசாவால் தொடங்கப்பட்ட மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி தலைமையகத்தில், ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இந்த சிறப்பு வழிபாட்டை நடத்தினர்.

மிஷினரிஸ் ஆஃப் சாரிட்டி 1950 ஆம் ஆண்டு அன்னை தெரசாவால் தொடங்கப்பட்டது.

1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ஆம் தேதி, தற்போது மாசிடோனியா நாட்டின் தலைநகராக இருக்கும் ஸ்கோப் நகரில், அவர் பிறந்தார்.

அவரது இயற்பெயர் காங்க்ஸே போயாக்யூ, அவர் பிறந்த போது ஸ்கொப் நகரம் அல்பேனியாவில் இருந்தது.

கொல்கத்தா நகரின் குடிசைப் பகுதியில் அவர் ஆற்றிய பணிகளுக்காக 1979 ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

அவருக்கு “புனிதர்” எனும் பட்டத்தை வழங்குவதற்கான முன் நடவடிக்கைகளை ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாட்டிகன் 1997 ஆம் ஆண்டு முன்னெடுத்தது.

அயராத உழைப்பாளி"-போப் பெனடிக்ட்

இறைவனால் வழங்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அன்பளிப்புக்காக மனித குலம் இறைவனுக்கு நன்றி சொல்லும் ஒரு ஆண்டாகவே இந்த நூற்றாண்டு விழா அமையும் என தான் நம்புவதாக போப் பெனடிக்ட் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்நாள் முழுவதும் அன்போடு மக்களுக்கு அயராத உழைப்பை அவர் மேற்கொண்டார் என போப் பெனடிக்ட் அன்னை தெரசாவின் நூற்றண்டு விழா தொடக்கம் குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்வும், மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகளும், தொடர்ந்து இளைஞர்கள், முதியவர்கள், ஏழை, பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தும் என, அன்னை தெரசாவால் ஏற்படுத்தப்பட்ட மிஷினரிஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் தற்போதைய தலைவரான சகோதரி பிரேமா தெரிவித்துள்ளார்.


அன்னை தெரசா இறைவனால் அளிக்கப்பட்ட மதிப்பிட முடியாத ஒரு கொடை

போப் பெனடிக்ட்

நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள், இறக்கும் தருவாயில் இருந்தவர்கள், அனாதரவான நிலையில் இருந்தோர்களுக்காக தனது வாழ்க்கையை அர்பணிக்கும் நோக்கில் 1929 ஆம் ஆண்டு அன்னை தெரசா இந்தியாவுக்கு வந்தார்.

1997 ஆம் ஆண்டு அவர் மரணமடைந்த போது அவர் உருவாக்கிய மிஷினரிஸ் ஆஃப் சாரிட்டியின் தலைமையகத்திலேயே அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அவருக்கு புனிதர் பட்டம் வழங்கும் நடவடிக்கையை மறைந்த போப் இரண்டாவது ஜான் பால் 2003 ஆம் ஆண்டில் முன்னெடுத்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter