>> Wednesday, August 18, 2010
மதானி கைது
மதானி
பெங்களூர் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையதாக குற்றம்சாட்டி கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
குண்டுவெடி்பபில் அவருக்குத் தொடர்பு இரு்பபதாக, அவர் மீது கர்நாடக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அவரைக் கைதுசெய்ய பெங்களூரில் உள்ள ஒரு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கேரளத்துக்குச் சென்ற போலீசார், கொல்லத்தில் கடந்த 6 நாட்களாக மதானியக் கைது செய்யக் காத்திருந்தனர்.
செவ்வாய் பிற்பகல் ஒரு மணிக்கு கேரள போலீசாரின் ஒத்துழைப்புடன் மதானியை கர்நாடக போலீசார் கைது செய்தனர். அப்போது, மதானியின் ஆதரவாளர்கள் பெருமளவில் அங்கு கூடியிருந்தார்கள்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மதானி, பெங்களூர் குண்டுவெடிப்புக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.
தான் நீதிமன்றத்தில் சரணடைய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் கைது செய்யப்பட்டார்.
தான் கைதாவதைத் தவிர்க்க, உச்சநீதிமன்றத்தில் மதானியின் சார்பில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த மனு விசாரணைக்கு வரும் முன்னதாகவே கர்நாடக போலீசார் மதானியைக் கைது செய்துவிட்டனர்.
இதையடுத்து, அவரது மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில், வழக்கமான முறையில் ஜாமீன் கோரி அவர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த 1998-ம் ஆண்டு கோவை நகரில் ஐம்பதுக்கும் மேற்பட்டோரை பலிகொண்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைதாகி சிறையிலடைக்கப்பட்ட மதானி, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment