>> Saturday, August 7, 2010


மோசடி பேர்வழி கைது- போலிஸ் தகவல்


சக்விதிக்கு எதி்ராக 2000 புகார்கள் உள்ளன'- போலிஸ்
இலங்கையில் பெரும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிசார் அறிவித்துள்ளனர்.
சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இந்த வழக்கு தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடியில் பலகோடிக்கணக்கான ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டதாக அப்போது செய்திகள் வந்தன.

சக்விதி வீடு கட்டுமான நிறுவனம் என்ற இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த பல ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்ததாக இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சக்விதி வீரக்குமார ரணசிங்க மீது பலர் புகார் செய்திருந்தனர். இந்த நிலையில் அவர் தலைமறைவானார்.

அவர் நாட்டை விட்டுத் தப்பியோடியிருக்கலாம் என்று ஊகங்கள் நிலவின. இதையடுத்து, அவரைக் கைது செய்ய சர்வதேச போலிஸ் நிறுவனமான, இண்டர்போலின் உதவியை இலங்கை போலிஸார் நாடியதாகவும் செய்திகள் கூறின.

இந்த நிலையில் இலங்கை போலிஸாரால் அவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலிஸார் அறிவித்தனர்.

இது குறித்து தமிழோசைக்கு கருத்து தெரிவித்த இலங்கைப் போலிஸ் பேச்சாளர் பிரிஷாந்த ஜெயக்கொடி, 'போலிசார் சக்விதி என்ற இந்த மோசடி பேர்வழியை கைது செய்துவிட்டனர், இவர் இப்போது போலிஸ் காவலில் இருக்கிறார், இந்த வழக்கை இப்போது குற்றவியல் புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது' என்றார்.

முதலில் இவர் இலங்கையிலிருந்து தப்பி வெளிநாட்டுக்கு ஓடியிருக்கலாம் என்று கூறப்பட்டது. எங்கே அவர் கைது செய்யப்பட்டார் என்று கேட்டதற்கு, 'இலங்கையில் தான் அவர் கைது செய்யப்பட்டு இப்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்றார் போலிஸ் பேச்சாளர்.

விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பணம் எதுவும் இதுவரை கைப்பற்றப்படவில்லை எனவும்
பிரிஷாந்த ஜயக்கொடி கூறினார்.

சக்விதி ரணசிங்கவுக்கு எதிராக சுமார் 2000 புகார்கள் கிடைத்திருந்ததாக இலங்கைப் போலிசார் கூறுகின்றார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter