>> Wednesday, August 18, 2010


“புலி ஆதரவாளர்களால் ஆபத்து”



இலங்கை அரசிடம் சரணடையாத, அடையாளம் காணப்படாத விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் ஆபத்தானவர்கள் என்று தாம் கருதுவதாக இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
இலங்கை அதிபரின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை போரின் இறுதியாண்டுகள் குறித்து விசாரித்து வரும் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் முன்பு செவ்வாய்க்கிழமை கொழும்பில் சாட்சியமளித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடரும் சந்தேகம்

இலங்கையின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தொடர்பில் தானும் இலங்கை அரசும் அதிகபட்ச சந்தேகத்துடனேயே இருப்பதாகவும், அவர்களின் மனதில் விடுதலைப் புலிகள் மீது இன்னமும் அனுதாபம் இருகக்கூடும் என்று தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசிடம் சரணடையாத மக்கள் எத்தனை பேர் என்றோ அடையாளம் காணப்படாதாவர்கள் எவ்வளவு பேர் என்றோ தமக்கு தெரியாது என்று பாதுகாப்புச் செயலர் கூறியுள்ளார். அவர்களில் பலர் பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் கொள்கைக்கு ஆதரவாக மூளைச்சலவை செய்விக்கப்பட்டவர்கள் என்றும், அத்தகையவர்கள் தான் மிக மோசமான வகையினர் என்றும் தனது சாட்சியத்தின்போது அவர் கூறினார்.

“அத்தகையவர்களில் சிலர் அரசு உத்தியோகத்தவர்களாகவும் இருக்கலாம். அது மிகவும் ஆபத்தானது. அத்தகையவர்கள் அரசாங்கத்துடன் முழுமையாக இணைந்து செயற்படமாட்டார்கள். பல்வேறு திட்டங்களுக்காக அரசு அளிக்கும் நிதி உள்ளிட்ட பல விடயங்களை அவர்கள் சரியாக கையாளாமல் போகலாம். கடைமட்ட அரசு ஊழியர்களிடம் கூட இது நடக்கலாம். இப்படியான அடையாளம் காணப்படாத, அரசிடம் சரணடையாதவர்கள் தான் தொடர்ந்தும் ஆபத்தானவர்களாக இருந்து வருகிறார்கள்”, என்றார் கோட்டாபய ராஜபக்ஷ.

இலங்கையின் வடபகுதியின் காட்டுப் பகுதிகளில் இலங்கை ராணுவம் தொடர்ந்தும் மேலாதிக்கம் செலுத்தும் என்றும், அதன் மூலம் மீண்டும் விடுதலைப் புலிகள் அங்கே மீண்டும் தலைதூக்காமல் தடுக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இறப்புகள்

இலங்கை அரசை விமர்சிக்கும் சர்வதேச விமர்சகர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் இறப்புக்களையும் சாதாரண பொதுமக்களின் இறப்புக்களையும் ஒன்றாக கருதி குழப்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

போரின் இறுதிகட்டத்தில் ஆறாயிரம் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், முப்பதாயிரம் பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார். இதேயளவு விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

கே.பி.

தற்போது இலங்கை அரசின் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரான கே.பி. என்று அழைக்கப்படும் செல்வராசா பத்மனாபனின் மனதை இலங்கை ராணுவம் வெற்றிகரமாக மாற்றியமைத்திருப்ப தாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மலேஷியாவில் கைதுசெய்யப்பட்ட கே.பி., இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர்களின் குழு ஒன்று இலங்கைக்கு வந்தபோது அவர்களை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.

வன்முறை கொள்கைகளை கைவிடும்படி அரசாங்கம் அவரை வலியுறுத்திவருவதாக வெளியான செய்திகளை கோட்டாபய உறுதிப்படுத்தினார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter