>> Thursday, August 26, 2010


பஸில் ராஜபக்ஷவும் எஸ் எம் கிருஷ்ணா
பஸில் இந்திய விஜயம்
இலங்கையின் வடக்கே இன்னும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசு அக்கறை காட்டுவதாக இலங்கை பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இந்தியா சென்றுள்ள பஸில் ராஜபக்ஷ அவர்கள், இன்று புதுடெல்லியி்ல பல்வேறு அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினார்.

இன்று காலை, வேளாண் துறை அமைச்சர் சரத் பவார், சுற்றுலாத்துறை அமைச்சர் குமாரி ஷெல்ஜா ஆகியோரைச் சந்தித்தார். பிற்பகலில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவைச் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் பிபிசி தமிழோசையிடம் பேசிய பஸில் ராஜபக்ஷ அவர்கள், தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்பட இரு நாட்டு உறவுகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மீள்குடியேற்றப் பணிகள் நடைபெறும் வேகம் போதுமானதாக இல்லை என்று இந்தியா அதிருப்தியுடன் உள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து அவரிடம் கேட்டபோது, ``இல்லை... இரு தரப்பும் திருப்தியுடன் இருக்கிறோம். நாங்கள் நிறையச் செய்திருக்கிறோம். அதே நேரத்தில் இன்னும் செய்ய வேண்டியதும் ஏராளமாக உள்ளது,’’ என்றார் பஸில்.

இன்னும் 14 ஆயிரம் மக்கள்தான் முகாம்களில் உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களும் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மீனவர் பிரச்சினை குறித்தும் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் விவாதித்ததாக அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மீனவர் விவகாரம்



சமீபத்தில் இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் சந்தித்துப் பேசியுள்ளது குறித்து சுட்டிக்காட்டி, அவர்கள் அளிக்கும் திட்டங்களை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளுமா என்று கேட்டபோது, கடந்த 2008 ஆம் ஆண்டு தான் இந்தியா வந்தபோதே, அந்தப் பிரச்சினையில் அரசை ஈடுபடுத்தாமல் மீனவர்களே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று யோசனை தெரிவித்ததாக பஸில் ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இன்று மாலை, இந்தியாவின் தேசிய பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனனையும் பஸில் ராபஜக்ஷ அவர்கள் சந்தித்துப் பேசினார்.
.

இதனிடையே, இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரும் புதன்கிழமை இரவு புதுடெல்லி வந்து சேர்ந்தனர்.

நாடாளுமன்றத்தில் இலங்கை மீது புகார்

இதனிடையே, இலங்கையில் போர் முடிவடைந்து ஓராண்டுக்குப் பிறகும், இடம் பெயர்ந்த தமிழர்கள் இன்னும் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்றும், அவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களின் நிலையும் பரிதாபகரமாக உள்ளதாகவும் இந்திய நாடாளுமன்றத்தில் புதன்கிழமையன்று, தமிழகக் கட்சிகளின் சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.

அது குறித்து, இலங்கை செல்லும்போது அந்நாட்டு அரசுடன் தான் விவாதிக்க உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மறுவாழ்வு தொடர்பாக திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, இன்று மக்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

அப்போது அதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, இலங்கையில் தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்ய இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என்று உறுதியளித்தார்.

அப்போது குறுக்கிட்டு் பேசிய டி.ஆர். பாலு, இலங்கை அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். இலங்கையில் தமிழ் மக்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்படுகிறார்கள் என்றும், இன்னும் 52 ஆயிரம் பேர் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிரு்பபதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய – இலங்கை உடன்பாட்டின்படி, 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்த இல்கை முன்வரவில்லை என்று குற்றம் சாட்டிய பாலு, சமீபத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ் அவர்கள் அளித்த ஒரு பேட்டியில், அரசியல் தீர்வு காண்பதற்கு அவசரம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதாகவும், அரசியல் தீர்வு காணும் எண்ணம் அவருக்கு இல்லை என்பதை அது குறிப்புணர்த்துவதாகவும் பாலு புகார் கூறினார்..

தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்குச் சென்றிருந்தபோது, 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த 14 முகாம்களுக்கு மட்டும் தாங்கள் அழைத்துச்ச செல்லப்பபடவில்லை என்று குற்றம் சாட்டினார். அந்தச் சிறுவர்கள், விடுதலைப் புலிகளால் பயிற்சியளிக்கப்பட்டவர்கள் என்று தங்களிடம் அப்போது தெரிவிக்கப்பட்டதாகவும், அவ்வாறு இருந்தாலும் கூட அவர்கள் மனிதாபிமான அடிப்படையி்ல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா அதுபற்றிக் கவனிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியா அளிக்கும் உதவிகள், இலங்கைத் தமிழ் மக்களுக்கு முறையாகச் சென்றடையவில்லை என்றும் பாலு புகார் கூறினார்.

இந்தப் பிரச்சினை குறித்து அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, மதிமுக உறு்ப்பினர் கணேசமூர்த்தி ஆகியோரும் கவலைகளை வெளிப்படுத்தினார்கள்.

பின்னர் அமைச்சர் கிருஷ்ணா பேசும்போது, தங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, இடைத்தங்கல் முகாம்களில் இன்னும் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியா வழங்கும் உதவிகள் தமிழ் மக்களைச் சென்றடைகிறதா என்பது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்ட்டுள்ள நிலையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மூலம் கண்காணிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து மூத்த அதிகாரி ஒருவர் விரைவில் இலங்கை செல்லவிருப்பதாகவும், அவர் அங்குள்ள நிலையைத் தெரிந்துகொள்வார் என்றும் தெரிவித்தார்.

அதன் பிறகு தானும் அடுத்த மாதம் இலங்கை செல்லும்போது, அப்போது,. மூத்த அதிகாரி அளிக்கும் தகவல்களின் அடிப்படையிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலும் இலங்கை அரசிடம் இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்லவிருப்பாதகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter