>> Monday, August 23, 2010


முஸ்லிம் காங்கிரஸின் கொடி
தனி ஆணைக்குழு தேவை-முஸ்லிம் காங்கிரஸ்
முஸ்லிம் மக்களுக்கு தனி ஆணைக்குழு வேண்டும் என மு கா கோருகிறது
இலங்கையில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக தனியாக ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது.

ஜனாதிபதியால் அமைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன்னர் சாட்சியம் அளிப்பது குறித்து தாம் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்றாலும், அந்தக் குழு குறித்து தங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ளது என அதன் பொதுச் செயலர் ஹசன் அலி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழு 2002 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை இடம் பெற்ற நிகழ்வுகளிலிருந்து தான் பாடம் கற்றுக் கொண்டு இணக்கப்பாடு ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளது என்று சுட்டிக்காட்டும் அவர், அதற்கு முன்னரான காலகட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்துவதாகவும் கூறுகிறார்.

அரசு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இடம் பெற்ற பிரச்சினைகள் குறித்தே விவாதிக்க வேண்டும் எனக் கூறியுள்ள நிலையில், அந்த ஆணையத்தின் முன்னர் தமது தரப்பு கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமாக இருக்காது எனவும் ஹசன் அலி கருத்து வெளியிடுகிறார்.

2002 ஆம் ஆண்டுக்கு முன்னர் முஸ்லிம்கள் எதிர்கொண்ட துன்பங்கள் குறித்து ஏதும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று அரசு கருதியிருக்கலாம் எனவும் தான் நினைப்பதாக அவர் கூறுகிறார்.

“முஸ்லிம்களின் விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்தக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய பரிகாரங்களை வழங்குவதுதான் சரியான ஒரு அணுகுமுறையாக இருக்கும்” எனவும் தமிழோசையிடம் தெரிவித்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலர் ஹசன் அலி.

தற்போது செயற்பட்டு வரும் இந்த ஆணைக்குழுவின் அதிகார வரம்புகளை விரிவாக்கும் நோக்கில் ஜனாதிபதியுடன் விவாதிக்க தமது கட்சி எண்ணியுள்ளதாகவும் ஹசன் அலி கூறுகிறார்.

கற்றுக் கொண்ட படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யுத்தகாலம் முழுவதும் இடம் பெற்ற விடயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு எனவும் அவர் கூறுகிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter