>> Thursday, August 19, 2010


கடும் மழை: 18 சிறார்கள் பலி


உத்தராகண்ட் மலைப்பகுதி
வடஇந்தியாவில் திடீரென பெய்த பெருமழை காரணமாக ஒரு பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 18 சிறார்கள் பலியாகியுள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலத்தின், பாகேஸ்வர் மாவட்டத்தில் இருக்கும் கப்கோட் பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் வடபகுதிகளில் பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், புதன்கிழமை காலை அப்பகுதியில் திடீரென பெருமழை பெய்ததால், கப்கோட் பகுதியில் இருந்த ஒரு பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடத்தின் இடிபாடுகளிலிருந்து ஆறு குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டாலும், இன்னும் பலர் அதில் சிக்கியுள்ளனர் என உத்தராகண்ட் மாநிலத்தின் தலைநகர் டெஹ்ராடூனில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

அம்மாநிலத்தின் மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பருவ மழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது எனவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த விபத்து ஏற்பட்ட போது அந்தப் பள்ளியில் எவ்வளவு சிறார்கள் இருந்தனர் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. அப்பகுதியில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக மாநில அரசு கூறுகிறது.

மழை காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள், சாலை உடைப்புகள் ஆகியவற்றின் காரணமாக நிவாரண வசதிகள், மாநிலத் தலைநகரிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் விபத்து நடைபெற்ற கிராமமான சும்கரை சென்றடைவதை மேலும் தாமதப்படுத்தியுள்ளன எனவும் மாநில அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அந்தப் பகுதிக்கு அவசர மருத்துவ உதவி வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் எனினும் அப்பகுதிகான தகவல் தொடர்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில பேரிடர் மேலான் அமைப்பின் தலைவர் பியூஷ் ரத்தேலா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter