>> Friday, August 20, 2010
மூதூர் படுகொலை -"விசாரணை தேவை"
பிரேத பரிசோனைக்காக எடுக்கப்படும் கொல்லப்பட்டோரின் சடலங்கள்
இலங்கையின் கிழக்கே மூதூரில் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி முன்வைத்துள்ளது.
சர்வதேச மனித நேய தினத்தை ஒட்டி அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் விடுத்துள்ள அறிக்கையில் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூதூரில் இயங்கி வந்த ஏசிஎப் என்ற பிரன்ச் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 ஊழியர்கள் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் படுகொலை செய்யப்பட்டனர்.
இது பற்றி அந்த அமைப்பின் தெற்காசிய ஆய்வாளர் யோலண்டா பாஸ்டர் தமிழோசையிடம் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் பல வழக்குகளில் குற்றம் இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும், இந்நிலையில் இவ்வழக்கையும் இது போன்ற பிற வழக்குகளையும் பற்றி சர்வதேச சுயதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வழக்கு விசாரணையை நடத்த ஐ நா சுயாதீன விசாரணை ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த கோரி்ககையை தாம் ஆதரிப்பதாக மூதூரில் கொல்லப்பட்ட 17 பேரின் குடும்பத்தினருக்காக ஆஜராகிய வழக்கறிஞரான ரத்தினவேல் பிபிசியிம் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக பூர்வாக விசாரணைகள் சரியாக நடைபெறவில்லை என்று கூறிய ரத்தினவேல், காவல்துறையினரும், அரசும் குற்றம்சாட்டப்பட்டவர்களை வேண்டுமென்றே தப்பவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் அரசால் நியமிக்கப்படும் அடிவருடிகளால் நடத்தப்படும் விசாரணைகளில் எவ்வித நியாயமும் கிடைக்காது
வழக்கறிஞர் ரத்தினவேல்
இது தொடர்பான விசாரணைக் கமிஷன் கண்துடைப்பாக இருந்ததாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத நிலை தொடர்வதாகவும் ரத்தினவேல் கூறினார்.
இலங்கையில் அரசால் நியமிக்கப்படும் அடிவருடிகளால் நடத்தப்படும் விசாரணைகளில் எவ்வித நியாயமும் கிடைக்காது என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை வேண்டும் என்று வரும் கோரிக்கைகளை இலங்கை அரசு தொடர்ந்து புறம்தள்ளி வருகிறது.
அதே நேரம் 2006 ஆம் ஆண்டு ஜனவரி முதல் துவங்கி 2007 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத காலப் பகுதி வரை இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிவந்த 67 பேர் கொல்லப்பட்டனர் அல்லது கடத்தப்பட்டனர் என்றும் அம்னேஸ்டியின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment