>> Saturday, August 7, 2010
பாக். வெள்ளத்தில் 12 மில்லியன் பேர் பாதிப்பு
பாகிஸ்தான் வெள்ளம்
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களின் அளவு 12 மில்லியனை எட்டியுள்ளதாக அந்நாட்டு அரசாங்க நிவாரண முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் வெள்ளச்சேதம் தொடர்ந்தும் விபரீதமான அளவுக்கு அதிகரித்துக்கொண்டிருப்பதாக கூறும் பிபிசி செய்தியாளர் ஆடம் மைனாட், ‘இது பாகிஸ்தான் சந்திக்கும் பேரழிவு என்று சொன்னால் அது மிகையல்ல’ என்று கூறுகிறார்.
பாகிஸ்தானின் வடமேற்கில் துவங்கிய பேய்மழையும் பெருவெள்ளமும், நாட்டின் மத்திய பகுதிகளை தாண்டி தெற்கிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தத் துவங்கியிருப்பதாக அவர் கூறுகிறார்.
பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமாகவும், நாட்டின் தொழில் தலைநகராகவும் வர்ணிக்கப்படும் கராச்சி நகர் அமைந்திருக்கும் சிந்த் பிராந்தியத்தில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால், அங்குள்ள 11 மாவட்டங்களில் இருந்து ஐந்துலட்சம் மக்களை அதிகாரிகள் மேடான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.
பெருக்கெடுக்கும் ஆறுகள்
பஞ்சாப் மற்றும் சிந்த் பிராந்தியங்களில் மின்கசிவால் மக்கள் உயிரிழக்காமல் தடுப்பதற்காக மின்விநியோகம் முற்றாக தடைசெய்யப்பட்டிருக்கிறது.
சிந்த் நதியை ஒட்டிய பகுதிகளில் இருந்து பத்துலட்சம் மக்களை வெளியேற்ற தாங்கள் முயல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மட்டும் 2 லட்சத்து 63 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன.
நாட்டின் வடமேற்கில் இந்த வெள்ளம் காரணமாக, கடந்த ஒருவாரத்தில் 1600 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருகிறார்கள்.
பாக். அதிபர் பிரிட்டனில்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் மத்தியில், நாடு வெள்ளத்தில் சிக்கி திணறிக்கொண்டிருக்கும்போது அதிபர் ஆசிப் அலி சர்தாரி பிரிட்டனில் பயணம் மேற்கொண்டிருப்பது கடும் கோபத்தை உண்டாக்கியிருக்கிறது.
தாலிபன் வன்முறைக்கும், பொருளாதார நெருக்கடிக்கும் மத்தியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானின் அரச நிர்வாகத்தால் இந்த திடீர் வெள்ளச்சேதத்துக்கு முகம் கொடுக்க முடியவில்லை.
0 comments:
Post a Comment