>> Saturday, August 21, 2010
இந்திய நாடாளுமன்றம்
இந்திய எம்.பி.க்கள் சம்பளம் உயர்வு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்தை 3 மடங்காக அதிகரிக்க இந்திய அமைச்சரவை இன்று காலை ஒப்புதல் அளித்தது. ஆனால், அந்த உயர்வு போதாது என்று பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது, மாதம் 16 ஆயிரம் ரூபாயாக உள்ள சம்பளம், 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுதவிர, தினப்படி, தொகுதி சுற்றுப்பயணப்படி, அலுவலக ஊழியர் ஊதியம், இலவச விமானப் பயணக் கட்டணம் உள்ளிட்ட பிற சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.
ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், அரசுத்துறைச் செயலர்களின் ஊதியத்தைவிடக் குறைவாக இருக்கிறது என்று உறுப்பினர்கள் புகார் கூறுகிறார்கள். அரசுத்துறைச் செயலர்களின் ஊதியம் 80 ஆயிரம் ரூபாயாக உள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் அதைவிட ஒரு ரூபாயாவது கூடுதலாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.
வெள்ளி காலை மக்களவை கூடியதும், ஆர்ஜேடி, சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள், அமைச்சரவையின் முடிவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள்.
நாடாளுமன்ற நிலைக்குழு 80,001 ரூபாய் வழங்க பரிந்துரை செய்துள்ள நிலையில், அரசு 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருப்பது நியாயமில்லை என்று உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இது பெரிய அவமானம், இதை எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும் என ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினார்கள். பின்னர், எங்கள் ஊதியத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள் என்று கோஷமிட்டவாறு, அவையின் மையப்பகுதிக்கு வந்தார்கள். இருக்கைக்குத் திரும்புமாறு மக்களவைத் தலைவர் விடுத்த வேண்டுகோளை அவர்கள் ஏற்கவில்லை.
கேள்வி நேரத்தை நடத்த விடாமல் அவர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அப்போதும், கூச்சல் நீடித்ததால் பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கனவே, சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வுத் திட்டம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வந்தபோது, சில அமைச்சர்கள் அத்தகைய உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டது. அதையடுத்து, தற்போது இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
எதி்ர்ப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளமைக்கு சென்னை வாக்காளர்கள் பலர் தமது எதிர்ப்பை தமிழோசையிடம் தெரியப்படுத்தினர்.
ஏற்கனவே பல வசிதிகளை இலவசமாகப் பெறும் நாடாளுன்ற உறுப்பினர்களுக்கு இது போன்ற ஊதிய உயர்வு தேவையற்றது என்ற கருத்தை ஒருவர் முன்வைத்தார்.
தொகுதியை புறக்கணிக்கும் எம்.பி.க்களுக்கு இந்த அளவுக்கு ஊதியம் தேவையில்லை என்ற கருத்தை மற்றொறுவர் வெளியிட்டார்.
0 comments:
Post a Comment