>> Wednesday, August 18, 2010
இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை
இலங்கை மீனவர்கள்
இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையே மீன்பிடித் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்க்கும் நோக்குடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை ராமேஸ்வரத்தில் துவங்கியுள்ளது.
இதில் கலந்துகொள்ள 23 பேர் கொண்ட இலங்கை மீனவர் குழு இந்தியா வந்துள்ளது.
ராமேஸ்வரம், ஜெகதாம்பட்டினம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மீனவர்களை சந்தித்து இவர்கள் பிரச்சனைகளைக் கேட்டறிவார்கள்.
இக்கூட்டத்தின் முடிவுகள் இரு அரசுகளிடமும் அளிக்கப்படும் என்றும் அதன் பிறகு அவர்கள் மேல் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றும் இலங்கை மீனவர் சங்க தலைவர்களில் ஒருவரும் இலங்கை மீன் வள அமைச்சின் சார்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்பவருமான அந்தோணி பிள்ளை தமிழோசையிடம் தெரிவித்தார்.
கடந்த இரு தசாப்தங்களுக்கும் கூடுதலான காலத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தமிழக மீனவர்கள் கூறுகின்றனர்.
அதேநேரம் இலங்கையில் உள்நாட்டுப் போரால் அங்கு மீன் தொழில் பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அதிக தூரம் வரை சென்று மீன் பிடித்து வந்தனர்.
தற்போது இலங்கையில் மீன் பிடித் தொழில் மீண்டும் தலைதூக்கத் துவங்கியுள்ள நிலையில், தமது கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளை வைத்து அதிக அளவில் மீன் பிடிக்கக் கூடாது என்று இலங்கை மீனவர்கள் விரும்புகின்றனர்.
இழுவைப் படகுகள் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்த இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த தென்னிந்திய மீனவர் சங்கங்களுடைய கூட்டமைப்பின் செயலர் விவேகானந்தன், இழுவைப் படகு பயன்பாடு முக்கிய விவதாப் பொருளாக இருக்கும் என்றார்.
மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முடிந்த பிறகு வரும் 20, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் சென்னையில் ஒரு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அதில் இரு நாட்டு மீன் துறை அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment