>> Thursday, August 26, 2010


வைகோ
'போர் நிறுத்தத்தை தடுக்கவில்லை'
இலங்கைப் போரின் இறுதிக்கட்டங்களில் போர் நிறுத்தம் ஏற்படுவதைத் தடுத்தது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோதான் என்ற குற்றச்சாட்டினை வைகோ வன்மையாக மறுத்திருக்கிறார்.

இந்திய அரசின் முன்முயற்சி வெற்றி பெற்று, விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்துக்கு ஒத்துக்கொண்டிருந்தால், அது அன்று அஇஅதிமுக அணியில் இருந்த விடுதலைப் புலி ஆதரவு கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தேர்தல்களில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சியே வைகோ போர் நிறுத்தத்திற்கு உடன்படக்கூடாது என விடுதலைப்புலிகளை வற்புறுத்தினார் என அண்மையில் கேபி என்னும் குமரன் பத்மநாதன் ஒரு பேட்டியில் கூறியிருப்பது பொய்யான தகவல் என்று தான் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் வைகோ கூறியிருக்கிறார்.

விடுதலைப் புலிகளுக்கு நானோ, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் நெடுமாறனோ எந்த ஆலோசனையும் வழங்கவில்லை என்றும் ஈழத் தமிழர்கள் விஷயத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது எல்லோரையும்விட பிரபாகரனுக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவரின் முடிவுக்கு தங்களால் ஆன உதவிகளை மட்டுமே செய்து வந்தோம் என்றும் வைகோ கூறீயுள்ளார்.

தவிரவும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எப்போதுமே போர் நிறுத்தத்திற்கு தயாராய் இருந்ததில்லை என்பது எல்லோருக்குமே தெரியும், அந்த நிலையில், தான் எப்படி அவருக்கு அத்தகையதொரு ஆலோசனையை வழங்க முன்வந்திருக்கமுடியும் எனவும் தனது அறிக்கையில் வைகோ வினவியிருக்கிறார்.

கே.பி இப்போது இலங்கை அரசின் கைப்பாவையாக செயல்படுவதாகக் கூறும் வைகோ, இடம் பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்களிடத்தில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தவும், தமிழீழம் இனி சாத்தியமில்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் அவரை ஒரு கருவியாக இலங்கை அரசு பயன்படுத்தி வருகிறது என்றும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

2002 இல் இலங்கை கடற்படையால் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு பொறுப்புகளில் இருந்து பிரபாகரனால் நீக்கப்பட்டவர்தான் குமரன் பத்மநாதன் என்றும் அவர் எதிரிகளிடம் சென்று விடக் கூடாது என்பதற்காக சர்வதேச செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்றும் வைகோ கூறியிருக்கிறார்.

தவிரவும் கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, தொகுதிப் பங்கீடு குறித்து சிக்கல் எழுந்ததால் போட்டியிடாமலே இருந்துவிடலாம் என்று தான் யோசித்துக்கொடிருந்தபோது, நடேசனே தன்னைத் தொடர்புகொண்டு போர் உக்கிரமாக நடந்துவரும் நிலையில் மதிமுக போட்டியிடுவது அவசியம், அதைத்தான் பிரபாகரன் விரும்புகிறார் என்று தன்னிடம் கூறியதாகவும் வைகோ கூறியிருக்கிறார்.

மத்திய அமைச்சர் பதவி தன்னை நாடிவந்தபோதும் அதை நிராகரித்த தான், உறுதியாக வெற்றி பெறமுடியும் என்று தெரிந்தும் 2004 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடாத தான், தேர்தல் வெற்றிக்காக இலங்கைத் தமிழர் நலனை பலிகொடுத்ததாகக் கூறுவது அவதூறு என்றும் அவர் கூறியிருக்கிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter