>> Tuesday, August 24, 2010
ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை
'விரைவான மீள்குடியேற்றம்': கோரிக்கை
இலங்கையில் இன்னமும் முகாம்களில் தங்கியிருக்கும் சுமார் ஐம்பதாயிரம் பேரை அவர்களின் சொந்த இடங்களில் விரை வில் குடியேற்றுவது குறித்தும், ஏற்கெனவே மீள்குடியேற்றப் பட்டவர்களுக்கு தேவையான வாழ்வாதாரங்களை உருவாக்கு வது குறித்தும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கத்தோலிக்க ஆயர்களின் குழு வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடக்கும் கத்தோலிக்க ஆயர்களின் ஆண்டு கூட்டத்திற்காக நாடு முழுவதிலிருந்தும் வந்திருக்கும் கத்தோலிக்க ஆயர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஞாயிற்றுக்கிழமையன்று குழுவாக சென்று சந்தித்தனர்.
அந்த சந்திப்பின்போது, இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றிய இலங்கை அரசின் நடவடிக்கைக்கு கத்தோலிக்க ஆயர்கள் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதாக, இந்த குழுவில் சென்றிருந்த திருகோணமலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அதேசமயம் மீள்குடியேற்றப்பட்டவர்களின் விவசாயம், மீன்பிடி போன்ற வாழ்வாதார தேவைகள், குடியிருப்பதற்கான வீடுகள் போன்றவற்றை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து தாங்கள் ஜனாதிபதியிடமும் அவருடன் இருந்த பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவிடம் வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
மேலும் மீள்குடியேற்றம் நடந்த பகுதிகளில் வசிக்கும் பள்ளி மாணவ மாணவிகளின் கல்வித்தேவைகள், ஆசிரியர்களின் பணியிடத்தேவைகள் தொடர்பில் அரசின் உதவி உடனடியாக தேவைப்படுவதை தாங்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதா கவும் அவர் கூறினார்.
மேலும் ஆண்டுக்கணக்கில் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருப்பவர்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று தாங்கள் கோரியதாகவும் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்கள் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment