>> Friday, August 27, 2010




இலங்கைக்கு உதவிகள் தேவை-ஐ நா


ஐ நா வின் சின்னம்
சர்வதேச உதவிகள் இலங்கைக்கு அவசியம் தேவை-ஐ நா
இலங்கையில் சர்வதேச நிறுவனங்கள் தொடர்ந்து தங்கியிருந்து பணியாற்ற வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்று இலங்கைக்கான ஐ நா வின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம் பெயர்ந்த மக்களுக்கான உதவிகளையும், மீண்டும் தமது பகுதிக்கு திரும்பியுள்ளவர்களுக்கான அவசரத் தேவைகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பதால் சர்வதேச அமைப்புகளின் உதவி இலங்கைக்கு இன்றியமையாததாகவே இருக்கின்றது எனவும் அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பணிகள் முடிவடைந்துவிட வில்லை என்பதையும் தெளிவாக தனது அறிக்கையில் நீல் பூனே சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நெருக்கடியான காலப்பகுதியில் தொடர்ந்து சர்வதேச அமைப்புகளின் ஆதரவை ஐ நா கோருகிறது எனவும் அவரது அறிக்கை கூறுகிறது.

மிகவும் தேவைப்படும் இக்காலத்தில் அளிக்கப்படும் உதவிகள் தேவையான மக்களுக்கு நேரடியாகவும், இலங்கையின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் எனவும் நீல் பூண் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சிக்கு அமைதி அவசியம்


இடம் பெயர்ந்த மக்கள்
இடம் பெயர்ந்த மக்கள்

மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் நலன்கள் பேணப்படுவது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவசியம் என்றும், நீடித்திருக்கக் கூடிய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு அது அத்தியாவசியம் எனவும் தெரிவித்துள்ள ஐ நா வின் வதிவிடப் பிரதிநிதி, அதற்கு இந்த நிதியாதாரங்கள் மிகவும் தேவை எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

2009 ஆம் ஆண்டின் பிற்பகுதி தொடங்கி இதுவரை இரண்டு லட்சம் மக்கள் வடகிழக்கில் மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளனர் எனவும், அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது எனவும் நீல் பூனே கூறியுள்ளார்.

ஆனாலும், இன்னமும் 70,000 மக்கள் இடம் பெயர்ந்த நிலையிலேயோ அல்லது தமது இருப்பிடங்களுக்கு அருகில் வேறு ஒரு இடைத்தங்கல் முகாமிலேயோ இருப்பதாக தாங்கள் கணக்கீடு செய்துள்ளதாகவும் ஐ நா வின் பிரதிநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இன்னமும் 35,000 பேருக்கும் குறைவானவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் இன்னமும் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல மில்லியன் டாலர்கள் தேவை


ஐ நாவின் இலங்கை பிரதிநிதி நீல் பூண்
ஐ நா வின் இலங்கை பிரதிநிதி நீல் பூண்
இது வரை சர்வதேச அமைப்புகளிடமிருந்து 125 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்திருந்தாலும், இந்த ஆண்டின் எஞ்சியிருக்கும் காலப்பகுதியில் மட்டுமே, ஐ நா திட்டமிட்டுள்ள மனிதாபிமான பணிகளை முன்னெடுக்க 165 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகின்றன எனவும் நீல் பூனே தெரிவித்துள்ளார்.

என்னதான் ஐநாவும் சர்வதேச அமைப்புகளும் உதவிப் பணிகளை முன்னெடுத்திருந்தாலும், இடம் பெயர்ந்த மக்களும், மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களும் இன்னமும் பலவீனமான நிலையிலேயே உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்களின் வாழ்வாதாரங்கள் மீண்டும் முழுமையாக கிடைக்கப் பெறும் வரையில், அவர்கள் உதவி தேவைப்படும் நிலையிலேயே உள்ளனர் எனவும் ஐ நா வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter