>> Tuesday, April 27, 2010


குட்டிமணியின் கதிதான் பொன்சேகாவுக்கும் கிடைக்கப் போகிறது..! – பழ.நெடுமாறன் பேட்டி..!


[ பிரசுரித்த திகதி : 2010-04-26 05:37:28 PM GMT ]


தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி இது..!

“மே மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன! நெஞ்சில் கொஞ்சம் இரக்கத்தையும் ஈரத்தையும் வைத்திருப்பவர்கள் அத்தனை பேரையும் ரத்தக் கண்ணீர் வடிக்கவைத்த ஈழத்துக் கொடூரங்கள் அரங்கேறி ஓராண்டு முடியப்போகிறது.

இறந்து மண்ணுக்குப் போனவர் எண்ணிக்கைகூட முழுமையாக இன்னமும் எடுக்கப்படவில்லை. மனரீதியாக இறந்துபோய் நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்போர் நிலை குறித்தும் முழுமையாக அறிய முடியவில்லை. ஆனால், அவர்கள் இரண்டு தேர்தலை நடத்தி முடித்துவிட்டார்கள்.

கோமா நிலையில் கிடக்கும் ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் குறித்து அறிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைச் சந்தித்தோம்…

”ஈழத்துக் கொடூரங்கள் நடந்து முடிந்து ஓராண்டு ஆகப்போகிறது. என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டுஉள்ளன?”

கொடூரங்கள் நடந்து முடியவில்லை. இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஈழத் தமிழர் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஏமாற்றமே இன்னமும் தொடர்கிறது. மேலும் மேலும் துன்பம் அதிகமாகி வருகிறது. முள்வேலி முகாமில் இருந்த மக்களை உலக நிர்பந்தத்துக்குப் பயந்து விடுவிப்பதாக ராஜபக்சே கூறினார். முழுமையாக விடுவிக்கவில்லை. ஒரு பகுதி மக்களையே விடுவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்டவர்களும் தங்களது ஊருக்குப் போனால் அவர்கள் வீடுகள் எல்லாம் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டு உள்ளன. எனவே, இருப்பதற்கு இடம் இல்லாமல் பள்ளி, கோயில்களில் அடைக்கலம் புகுந்தார்கள். அவர்கள் தங்களது சாப்பாட்டுக்காக விவசாயம் பார்க்கவோ மீன் பிடிக்கப் போகவோ சிங்கள ராணுவம் அனுமதிக்க மறுக்கிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், ‘வன்னிப் பகுதியில் ஏராளமான ராணுவ முகாம்கள் இருப்பதால் தமிழ்ப் பெண்கள் வெளியே நடமாட அஞ்சுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். முகாம்களில் இருப்பவர்களுக்கும் அளிக்கப்பட்டு வந்த உதவிகள் அரைகுறையாகவே கிடைக்கின்றன.

சுதந்திரமாக நடமாடலாம் என்று இவர்களுக்கு சொல்லப்பட்டு இருந்தாலும், எங்கு போவது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறான் தமிழன். முகாம்களில் இல்லாத தமிழர்கள், சிங்கள ராணுவம் மற்றும் டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற குழுக்களால் அதிகமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

இதைவிடக் கொடுமையான செய்தி என்னவென்றால், இந்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்காகக் கொடுத்த 1,000 கோடி ரூபாய் பணத்தில் கட்டப்பட்ட வீடுகளில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகிறார்கள். அவர்களுக்காக புத்தக் கோயில்கள் அமைக்கப்படுகின்றன.

சிங்களப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்க் குழந்தைகள் சிங்களம் படித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

தமிழ்ப் பெயர் தாங்கிய ஊரின் பெயர்கள் சிங்களமாக மாற்றப்படுகின்றன. அதாவது, தமிழ்ப் பகுதிகள் என்று இலங்கையில் எதையும் சுட்டிக் காட்டிவிடக் கூடாது என்பதற்கான வேலைகள்தான் இந்த ஓராண்டு காலத்தில் நடந்து முடிந்திருக்கின்றன!

”ஜனாதிபதி தேர்தலில் வென்றது மாதிரியே நாடாளுமன்றத் தேர்தலிலும் ராஜபக்சே வென்றிருக்கிறார். இந்தத் தொடர் வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் 70 சதவிகிதத் தமிழர்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள். அதாவது, சிங்கள தேசத்தின் இனவாத அரசியலுக்குள் எமது நலன்களைத் தேட நாங்கள் விரும்பவில்லை என்பதைத்தான் இந்தப் புறக்கணிப்பின் மூலம் தமிழர்கள் உலகத்துக்கு அறிவித்திருக்கிறார்கள்.

பொதுவாகவே, இலங்கையில் இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் 75 சதவிகித வாக்குகள் பதிவாகும். ஆனால், வரலாற்றில் முதன்முறையாக 55 சதவிகித வாக்குகள்தான் பதிவாகி உள்ளன. தமிழ் மக்கள் மட்டுமல்ல; சிங்கள மக்களும் இந்தக் கேலிக்கூத்தான நடைமுறைகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன!

“பொன்சேகா, தனது தொகுதியில் வெற்றிபெற்றுள்ளாரே?”

”ராஜபக்சே, பொன்சேகா மோதலின் விளைவாக சிங்கள மக்கள் பிளவுபட்டு உள்ளார்களே தவிர, தமிழர்களுக்கு இதனால் எந்த ஆதாயமும் கிடைக்கப்போவது இல்லை.

கடந்த ஆண்டின் இதே ஏப்ரல் மாதங்களில் நடந்த கொடுமைகளுக்கு அவர்கள் இருவரும்தானே காரணம். இவர்களின் மோதல் என்பது தேர்தல் மோதலாக மட்டும் நின்றுவிடாது. ராணுவத்துக்கும் மோதல் வெடிக்கும் அபாயம் இருக்கிறது. பொன்சேகாவுக்கு ஆதரவான ராணுவ அதிகாரிகள் பதவியில் இருந்து விலக்கப்பட்டு உள்ளனர். இது ராணுவத்தினர் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் பொன்சேகா ஒரு உறுப்பினராக வென்றிருந்தாலும் அவரை நாடாளுமன்றத்துக்குள் வர அனுமதிக்க மாட்டார்கள். 1980-களின் முதற் பகுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த டெலோ தலைவர் குட்டிமணி, சிறையில் இருந்தபோதே வட்டுக்கோட்டை தொகுதி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால், அவரை நாடாளுமன்றம் செல்வதற்கு அனுமதிக்காமல் கொலை செய்துவிட்டார்கள். இந்தக் கதி பொன்சேகாவுக்கும் ஏற்படலாம்!

”இதையெல்லாம் உலக நாடுகள் அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருக்கக் காரணம்?”

”வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை, சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது என்பதுதான் உண்மை.

போர்க் குற்றவாளியாக ராஜபக்சேவை மேற்கு நாடுகளும் ஐ.நா-வும் குற்றம் சாட்டி வருகின்றன. அதில் இருந்து தப்புவதற்கு அவர் பெருமுயற்சி செய்து வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு நடத்திய விசாரணையின் இறுதியில் வழங்கப்பட்ட தீர்ப்பில் ‘ராஜபக்ஷே போர்க் குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டியவர்’ என்று தெளிவாகத் தீர்ப்பளித்து உள்ளது.

இந்தத் தீர்ப்புக்கு பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கம், ‘நாங்கள் இலங்கைக்கு இதுவரை ஆயுதம் வழங்கியதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். இனி வழங்கமாட்டோம்’ என்று மன்னிப்பு கேட்டுள்ளது.

இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் ஆயத்த ஆடைகளுக்கு இதுவரை கிடைத்து வந்த வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் ரத்து செய்துள்ளது. உலக நாடுகள் இந்தக் கொடூரத்தை உணர்ந்துள்ளன.

ஆனால், இந்தியாதான் இன்னமும் இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் உதவி செய்துவருகிறது. இந்தியக் கடற்படைக் கப்பல்கள் திரிகோணமலைக்குச் சென்று சிங்கள கடற்படைக்கு பயிற்சி அளித்து வருகிறது. தமிழ் மீனவர்களைக் காப்பாற்ற வக்கற்ற இந்தியக் கடற்படைக்கு ஏன் இந்த வீண் வேலை?

இந்திய அரசும் கருணாநிதி அனுப்பிய தூதுக் குழுவும் தவிர, உணர வேண்டியவர்கள் அனைவரும் ஈழத்துக் கொடுமையை உணர ஆரம்பித்து இருக்கிறார்கள்!

”சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இந்த ஓராண்டு காலத்தில் அதிகமாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?”

இலங்கையில் சீனா அதிகமாகக் காலூன்றுவது இந்துமாக் கடல் மார்க்கம் அவர்களது கட்டுப்பாட்டில் போவதற்குத்தான் வழிவகுக்கும். இதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. அவர்களைவிட இது இந்தியாவுக்குத்தான் பெரும் ஆபத்தாக முடியும்.

ஏற்கெனவே, இந்தியாவைச் சுற்றி உள்ள நேபாளம், மியான்மர், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் சீனா பலமாக வேரூன்றிவிட்டது. பாகிஸ்தானும் நெருங்கிய கூட்டாளி ஆகி விட்டது. எஞ்சியிருந்த இலங்கையும் சீனாவின் பக்கம் சாய்ந்து விட்டது. இந்தியாவைச் சுற்றி சீனா உருவாக்கி வரும் பேராபத்தை டெல்லியில் உள்ளவர்கள் உணரவில்லை.

‘சீனாவைவிட நான் அதிகமாக உதவிகள் செய்கிறேன்’ என்று இந்தியா கையாளும் தந்திரம் தற்கொலைக்குச் சமம். இந்தியாவைத் தனது நேசநாடாக ராஜபக்சே எப்போ தும் நினைக்க மாட்டார். அதை டெல்லி எவ்வளவு விரைவாக உணர்கிறதோ அது நம்முடைய நாட்டுக்கு நல்லது!

”விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று இயங்குகிறதா?”

ஈழத் தமிழர் பிரச்னை இன்று உலகளாவிய பிரச்னையாக இருப்பதற்கு பிரபாகரனும் விடுதலைப்புலிகள் இயக்கமும் செய்துள்ள தியாகம்தான் காரணம். 30 ஆண்டுகாலம் புலிகள் நடத்திய போராட்டத்தால்தான் தமிழர்கள் பாதுகாக்கப்பட்டனர்.

2 லட்சம் தமிழர்கள் உயிர் இழந்தும், 45 ஆயிரம் புலிகள் வீர மரணத்தைத் தழுவியும், 10 லட்சம் தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ முடியாமல் அகதிகளாக வெளியேறியும், 5 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே எல்லாவற்றையும் இழந்து தவித்த ஈழத்து சோகம் சொல்லி மாளாது. ஆனாலும், தங்கள் துன்பத்துக்குத் தமிழீழமே தீர்வு என்பதைத் தமிழர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

இப்போது நடந்திருப்பது தற்காலிகப் பின்னடைவு என்றுதான் கருதுகிறார்களே தவிர, எல்லாம் முடிந்துவிட்டது என்று எவரும் நினைக்கவில்லை. புலிகளை அழித்துவிட்டோம் என்று கொக்கரிக்கிற ராஜபக்சே, கூடுதலாக ஒரு லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்கிறார். ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறார். புலிகள் அமைப்பு இயங்குகிறது, முன்னிலும் பலமாக இயங்குகிறது, அடுத்த தாக்குதலை அவர்கள் ஆரம்பித்தால் அது பலமானதாக இருக்கும் என்பது ராஜபக்சேவுக்குத் தெரியும்!

”ஏற்கெனவே கேட்கப்பட்டதுதான்… பிரபாகரன் இருக்கிறார் என்று இன்னமும் எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?”

பிரபாகரனின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து கிடைத்து வந்த தகவலை வைத்துதான் நான் உறுதியாகக் கூறுகிறேன். பிரபாகரன் உள்பட முக்கியத் தளபதிகளை ஒழித்துவிட்டதாக ராஜபக்சே சொல்வதை சிங்கள மக்களே நம்பவில்லை. இன்னமும் அவர்களுக்கு அச்சம் இருக்கிறது.

பிரபாகரன் தலைமையில் அந்தப் போராட்டம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம். எப்போது எந்தக் காலகட்டத்தில் என்பதை பிரபாகரன் மட்டுமே முடிவு செய்ய முடியும். உற்ற தருணம் நோக்கி அவர் காத்திருக்கிறார். அந்தக் காத்திருப்பு வீண் போகாது!

நன்றி : ஜூனியர்விகடன்

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter