>> Tuesday, April 13, 2010







அணுகுண்டு பாதுகாப்பு மாநாடு

அமெரிக்க அதிபர் ஒபாமாவால் அழைப்பு விடுக்கப்பட்ட அணுப் பாதுகாப்பு மாநாட்டுக்காக நாற்பதுக்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் வாஷிங்டனில் கூடியுள்ளனர்.
ஆபத்தான அணு ஆயுதப் பொருட்கள் பயங்கரவாதிகளின் கரங்களைச் சென்றடைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு உடன்பாட்டுக்கு வருவதே இந்த மாநாட்டின் இலக்காகும்.
இந்த மாதிரியான மாநாடுகளை எடுத்துக்கொண்டால், 1940ஆம் ஆண்டுக்குப் பிறகு வாஷிங்டன் கண்ட மிகப் பெரிய மாநாடு இதுவாகும்.
அணுப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுப்பதற்கான அதிபர் ஒபாமாவின் முயற்சிகளின் ஒரு பகுதிதான் இது.
அணு ஆயுதத்தை உருவாக்கப் பயன்படும் பொருட்களை பாதுகாப்பது குறித்த திட்டத்தில் ஒரு பரந்துபட்ட இணக்கப்பட்டை காண்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்.
புளுட்டோனியம், செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆகியவை அரசு அல்லாதவர்களின் கரங்களில் சேர்வதைத் தடுப்பது இதில் அடங்கும்.
இந்தப் பணிகள் 4 வருடங்களுக்குள் செய்துமுடிக்கப்பட்டு விடவேண்டும் என்ற ஒரு அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பும் இருக்கிறது.
பாகிஸ்தான் மீது விசேட கவனம்
இரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்க மேற்குலகம் முயன்றுவருகிறதுஇந்த மாநாட்டுக்கு வடகொரியாவும், இரானும் அழைக்கப்படவில்லை. ஆனால், இஸ்ரேல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியன இதில் கலந்துகொள்கின்றன.
இந்த மூன்று நாடுகளும் அணுபரவல் தடை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை என்பதுடன், அவை அணு ஆயுதங்களை தாயாரித்து வைத்திருப்பதாகவும் கருதப்படுகின்றது.
பாகிஸ்தானின் அணு ஆலைகள் மற்றும் அதனிடம் இருக்கும் அணுப்பொருட்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு பற்றியும் கணிசமான கவலைகள் இருக்கின்றன.
இந்த நாடுகளை இம்மாநாட்டுக்கு அழைப்பதன் மூலம், அணு ஆயுத கட்டுப்பாட்டு வளையத்தை விரிவுபடுத்த அதிபர் ஒபாமா விளைகின்றார்.
அச்சுறுத்தல்
அணு ஆயுதங்களில் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு சுத்தீகரிக்கப்பட்ட யுரேனியம் உலகில் மொத்தமாக 1600 டன்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
இந்த அளவு முழுக்கவுமே அணு ஆயுத வல்லமை பெற்ற நாடுகளுடைய அரசாங்கங்களின் பொறுப்பில்தான் உள்ளதாகத் தெரிகிறது. அதிலே பெரும்பங்கு ரஷ்யாவிடம்தான் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த யுரேனியத்துக்கும் மேலாய் அணு ஆயுத தயாரிப்பில் முக்கியமாகத் தேவைப்படும் இன்னொரு வஸ்தான புளூடோனியம் உலகில் மொத்தத்தில் 500 டன்கள் அளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவற்றையெல்லாம் வைத்து ஒரு லட்சத்து இருபதாயிரம் குண்டுகளை உருவாக்க முடியுமாம்.
இதைத் தாண்டி வேறொரு கவலையும் உள்ளது. அதிகம் சுத்தம் செய்யப்படாத அணுசக்தி வஸ்துக்களை கொண்டு ஆங்கிலத்தில் டர்டி பாம் என்று சொல்லப்படுகின்ற தரக்குறைவான அணுகுண்டுகளை உருவாக்க முடியுமாம்.
இந்த குண்டுகள் ஒரு முக்கிய நகரத்தை அழிக்காமல் போனாலும், அணுக் கழிவுகளால் ஊரை மோசமாக மாசு படுத்தக்கூடிய ஆபத்தை அவை ஏற்படுத்திவிடும்.



மேலவை: தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்

தமிழக சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேலவையை அமைக்கும் தீர்மானம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
திமுக, காங்கிரஸ், பாமக உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்தும் அஇஅதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தீர்மானத்தை எதிர்த்தும் வாக்களித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பில் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.
இத்தீர்மானத்தை மொத்தம் 155 உறுப்பினர்கள் ஆதரித்தும், 61 பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர்.
உருவாக்கப்படக்கூடிய மேலவையில் 63 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் கருணாநிதிசட்ட மேலவை உருவாவதால் பல்வேறு பிரிவினருக்கும் பிரநிதித்துவம் கிடைக்கும் என முதல்வர் கருணாநிதி கூறினார். தவிர மேலவையால் வீண் செலவு என்ற வாதத்தையும் அவர் மறுத்தார்.
"மேலவைக்காக 1985-86-ல் 13 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயும் மேலவைச் செயலகத்துக்காக 18 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும்தான் செலவாகியிருந்தது. இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும்செலவு கொஞ்சம் அதிகமாக ஆகலாமே தவிர வேறல்ல. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டிற்காக அளிக்கின்ற தொகையைவிட இதுவொன்றும் அதிகமல்ல." என்றார் அவர்.
அதிகச் செலவு ஆகின்ற விஷயத்திலே நாங்கள் ஈடுபடுவதில்லை

தமிழக முதல்வர் கருணாநிதி
வாதப் பிரதிவாதங்கள்
என்றும், வர்க்க ரீதியான பிளவைக் கொண்டுவரவே இது உதவும் என்றும் மேலவை ஒழிக்கப்பட்ட காலத்தில் அதிமுக அரசில் அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் மேலவை மீண்டும் கொண்டுவரப்படும் யோசனையை எதிர்க்கிறார்.
செல்வாக்கு படைத்தவர்களுக்கு உறுப்பினர் பதவி வழங்க வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு முறைதான் சட்டமன்ற மேலவை என்றும், ஆளும் கட்சியினர் தமக்கு வேண்டியவர்களைத் தேர்வு செய்துகொள்ளவே மேலவை வழிவகுக்கும் என்றும், வர்க்க ரீதியான பிளவைக் கொண்டுவரவே இது உதவும் என்றும் அவர் வாதிடுகிறார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் செவ்வி
ஆனால் மேலவையால் பலனில்லை வீண் செலவுதான் என்ற வாதத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் மறுக்கிறார்.
டி.கே.எஸ்.இளங்கோவன் செவ்வி
சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டம் இரண்டு முறை விவாதிக்கபபடவும் மெருகேற்றப்படவும் மேலவை இடமளிக்கும் என்றும், சமூகத்தின் பலவேறு தரப்பினரும் இதில் உறுப்பினராவார்கள் என்பதால் பல்தரப்பு எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாகும் என்றும் அவர் கூறுகிறார்.
பின்னணி
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், 1986ம் ஆண்டு மேலவை கலைக்கப்பட்டது. அந்த நேரத்தில் மேலவை எதிர்க்கட்சித் தலைவர் தகுதியை பெற்ற கருணாநிதி, அஇஅதிமுக அரசை சங்கடத்திற்கு உள்ளாக்கும் வகையில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியதன் விளைவாகவே மேலவையைக் கலைப்பதென்று எம்.ஜி.ஆர் முடிவெடுத்தார் என்று கூறப்பட்டது.
அதன் பின்னர் திமுக ஆட்சியில் இருமுறை மீண்டும் மேலவையை கொண்டுவர சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் அனுமதிக்கும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.
ஆனால் அடுத்து ஆட்சிக்கு வந்த அஇஅதிமுக அத்தீர்மானங்களை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
மீண்டும் மேலவையை உருவாக்கும் முயற்சியில் திமுக அரசு தற்போது மறுபடியும் ஈடுபட்டுள்ளது.




சானியா-ஷொய்ப் திருமணம்

மணப்பெண்ணாக சானியா
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷொய்ப் மாலிக்கை ஹைதராபாத்தில் மணம் முடித்துள்ளார்.
ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த திருமண வைபவத்தை மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் முன்னின்று நடத்தி வைத்ததாக இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸா தெரிவித்துள்ளார்.
ஷொய்ப் மாலிக் வேறொரு பெண்ணை கடந்த வாரம் விவாகரத்து செய்திருந்ததன் பின்னர் இப்போது இத்திருமணம் நடந்துள்ளது.
இத்திருமணம் நடந்த விடுதிக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த இந்தியா-பாகிஸ்தான் விளையாட்டு நட்சத்திரங்கள் இடையிலான காதலும், அவர்கள் கல்யாணம் தொடர்பான சர்ச்சையும் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டிருந்தன.
ஷொய்ப் சானியா திருமணத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஷொய்ப் மாலிக்கின் முதல் மனைவி ஆயிஷா சித்தீகி, பொலிஸில் கொடுத்திருந்த புகார்களை அவர் வாபஸ் பெற்றதை அடுத்து, மாலிக்கிடம் இருந்து அவர் விவாகரத்து பெற்றிருந்தார்.
ஆயிஷா சித்தீகியை இணையத்தின் வழியாக சந்தித்ததாகவும், தொலைபேசியில் பேசி திருமணம் முடித்ததாகவும் முன்னதாக மாலிக் கூறியிருந்தார். தொலைபேசி வழியாக திருமணம் செய்துகொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆயிஷா சித்தீகி தனது புகைப்படம் என்று கூறி அனுப்பியிருந்த படங்கள் வேறொருவருடையது; ஆதலால் அவருடனான திருமணம் செல்லாது என ஷொய்ப் மாலிக் வாதிட்டிருந்தார்.
23 வயது சானியாவும் 28 வயது ஷொய்ப் மாலிக்கும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தனர்.
வேறொருவருடன் நிச்சயமாகியிருந்த சானியா இவ்வருட ஆரம்பத்தில் அதனை முறித்துக்கொண்டிருந்தார்.
திருமணத்திற்குப் பின்னர் இருவரும் துபாயில் வாழத் திட்டமிட்டுள்ளனர் என்றும், இருவரும் தத்தமது நாட்டையே விளையாட்டில் பிரதிநிதித்துவம் செய்வர் என்றும் கூறப்படுகிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter