>> Thursday, April 29, 2010



இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
சார்க் சாதித்தது என்ன?


சார்க் நாடுகளுக்கு இடையே மேலும் இணக்கம் தேவை
தெற்காசிய நாடுகள் அமைப்பு எனப்படும் சார்க் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் அது ஆரம்பிக்கப்பட்ட இலக்கை எட்டியதாகக் காணப்படவில்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
எனினும் இந்த 25 ஆண்டு காலப்பகுதியில் உலக அளவில் “தெற்காசிய நாடுகளுக்கான ஒரு அடையாளத்தை” சார்க் அமைப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று புதுடில்லியில் இருக்கும் தெற்காசிய ஆய்வாளர் டாக்டர் சகாதேவன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

அந்த அடையாளம் ஏற்பட்டிருந்தாலும் அந்த அமைப்பு இன்னும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

பொருளாதாரம் மற்றும் வர்த்தக ரீதியில் தெற்காசிய பிராந்தியம் இன்னமும் ஒரு இணைக்கப்படாத பகுதியாவே இருந்து வருகிறது என்றும் டாக்டர் சகாதேவன் சுட்டிக்காட்டுகிறார்.

குறைகள் இருந்தாலும் சார்க் அமைப்பு ஏதும் சாதிக்கவில்லை, அந்த அமைப்பினால் பலன்கள் ஏதும் இல்லை என்று கூறுவதையும் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறுகிறார்.

திட்டங்களை நிறைவேறுவதில் சிக்கல்கள்


இணைந்த கொடிகள்-இணையாத கொள்கைகள்
தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் ஏராளமான திட்டங்கள் சார்க் அமைப்பால் தீட்டப்பட்டிருந்தாலும், அதை செயற்படுத்துவதில்தான் பிரச்சினைகள் இருக்கின்றன எனவும் சுட்டிக்காட்டுகிறார் சகாதேவன்.

சமூக ரீதியிலான சில அபிவிருத்துகளை சார்க் அமைப்பு செய்துள்ளது என்று கூறும் அவர், பொருளாதார இணைப்பு என்பதில் ஏதும் முன்னேற்றங்கள் இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டியது என்கிறார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையே அரசியல் உறவுகள் எப்போது மேம்பாடு அடையுமோ அப்போதுதான் சார்க் அமைப்பின் செயற்பாடுகள் திறம்பட அமையும் எனவும் கூறுகிறார் புதுடில்லி ஜவஹர்லால் பல்கலைகழகத்தின் தெற்காசிய விவகாரங்கள் தொடர்பான பேராசிரியராக இருக்கும் டாக்டர் சகாதேவன்.

தெற்காசிய நாடுகளுக்கு இடையே இருக்கும் பலவித முரண்பாடுகளும் சார்க் அமைப்பின் வெற்றிக்கு தடைகளாக இருக்கின்றன எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்தியா போன்ற நாடுகள் பரப்பளவில் பெரிதாகவும், பொருளாதார வல்லமையும் மிகுந்த நாடுகள் ஒரு புறமும், நிலப்பரப்பில் சிறியதாகவும், பொருளாதார துறைகளிலும் பின் தங்கிய நாடுகளும் இருக்கும் நிலையுமே தெற்காசிய நாடுகளுக்கு இடையே நெருக்கமான இணக்கப்பாடு ஏற்படுவதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன என்பதும் அவர் கருத்தாக இருக்கிறது.

இந்தியா சில விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டும்



ஐரோப்பிய ஒன்றியத்தை போல தெற்காசிய நாடுகள் இணைந்து செயற்பட முடியாததற்கு அரசியல் ரீதியான காரணங்களுக்கு அப்பாற்பட்டு அப்பிராந்தியத்தில் இருக்கும் மற்ற நாடுகள் இந்தியாவை எப்படி பார்க்கிறார்கள் எடை போடுகிறார்கள் என்பது போன்ற வேறு காரணங்களும் இருக்கின்றன எனவும் பேராசிரியர் சகாதேவன் கூறுகிறார்.

தெற்காசிய நாடுகளிலேயே பெரிய நாடாக இருக்கும் இந்தியாவின் பங்களிப்பு கூடுதலாக இருந்தாலும், அரசியல் பொருளாதார ரீதியில் சில விட்டுக்கொடுப்புகளை இந்தியா செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இந்தியாவின் கொள்கைகளில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன எனவும் டாக்டர் சகாதேவன் கூறுகிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter