>> Tuesday, December 14, 2010


மருத்துவக் கல்வி உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு


இந்திய உச்சநீதிமன்றம்
இந்தியாவில் மருத்துவ பட்டப்படிப்புக்கான அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்க இந்திய உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
இது குறித்த அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில், இந்த விடயத்தில் தற்போதைய நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. அதுவும் தவிர தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நடைமுறையை கடைபிடிக்கின்றன.

சில மாநிலங்களும், தனியார் கல்லூரிகளும் நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்கின்றன. அதேசமயம் தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் +2 தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இதன் பின்னணியில், இந்திய மத்திய அரசு, இந்தியா முழுமைக்குமான பொது நுழைவுத்தேர்வு நடத்தி மருத்துவ படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்க முடிவெடுத்தது. இதை தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகளும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் கடுமையாக எதிர்த்தன.

மத்திய அரசின் இந்த முடிவு, மாநில அரசின் உரிமைகளை அபகரிப்பதாகவும், இந்தியா முழுமைக்குமான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்றும், கிராமப்புற மாணவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது உள்ளிட்ட பல காரணங்களின் அடிப்படையில் பொதுநுழைவுத்தேர்வு தேவையில்லை என்று இவர்கள் வாதிட்டார்கள்.

இந்த பின்னணியில், இது தொடர்பான வழக்கு விசாரணை இந்திய உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, இந்திய மத்திய அரசு இது குறித்த அரசாணை எதையும் பிறப்பிக்காத நிலையில், இந்த விடயத்தில் தற்போதைக்கு உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பில் இந்திய மத்திய அரசு உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்றும், அதை எதிர்ப்பவர்கள் அதற்கான காரணங்களுடன் நீதிமன்றத்தை அணுகினால், அந்த நிலையில் இது குறித்து நீதிமன்றங்கள் விசாரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பொது நுழைவுத்தேர்வு குறித்து அனைத்து மாநிலங்களின் கருத்துக்களையும் கேட்பதற்காக, இந்திய மத்திய அரசு எதிர்வரும் ஜனவரி மாதம் கருத்தரியும் கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter