>> Tuesday, December 14, 2010


ஆணைக்குழுவின் முன்னர் கருணா சாட்சியம்


பிராபகரனுடன் கருணா( பழைய படம்)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவையும், இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும் படுகொலை செய்தமை விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்த மிகப்பெரிய தவறு என்று இலங்கை அமைச்சரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.
பிராபகரனும் பொட்டும் தான் ராஜிவ் காந்தியை கொலை செய்ய வேண்டும் என்கிற முடிவை எடுத்ததாக தான் கருதுவதாகவும் முரளிதரன் ஆணைக்குழுவின் முன்னர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் ரகசியமான ஒரு அமைப்பு என்றும், அதில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது எனவும் தனது சாட்சியத்தில் அவர் கூறியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின், படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக திங்கட்கிழமை சாட்சியமளித்த அமைச்சர் முரளிதரன், இந்திய இராணுவம் பலரைக் கொன்றதற்காகவும், பல பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதற்காகவுமே விடுதலைப்புலிகள் ராஜிவ் காந்தியை கொல்வது என்று முடிவெடுத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கொண்டே அவர்கள் ராஜிவ் காந்தியை கொன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

காத்தான்குடியில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் 600 பொலிஸார் மட்டக்களப்பில் கொல்லப்பட்டமை ஆகியவை தொடர்பில் தனக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தனது சகாக்கள் 600 க்கும் அதிகமான பொலிஸாரைக் கொன்றுள்ளார்கள் என்று அவர் ஆணைக்குழுவின் முன்னர் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் கொலைகள் நடைபெற்ற சமயத்தில் தான் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter