>> Tuesday, February 23, 2010

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
அந்த அமைப்பின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தாவும், செயலாளராக தானும் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுவதாலேயே தாம் அதிலிருந்து விலகி புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம் மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அதிருப்தியடைந்தவர்கள் இந்த அமைப்பில் சேரலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக இந்த தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவை குறித்த அவரது செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்.
வவுனியாவில் வேட்பு மனுத் தாக்கல்
இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சியொன்று இன்று வவுனியா செயலகத்தில் முதலாவது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கின்றது.
ஓக்கம வசியோ, ஒக்கம ரஜவரு என்ற புதிய கட்சியே இவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றது. இந்தக் கட்சியில் சிவபெருமாள் கேதீஸ்வரன் என்பவருடைய தலைமையில் 9 வேட்பாளர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டிருக்கின்றன.
வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்கள். இலங்கையின் விகிதாசார தேர்தல் நடைமுறையின்படி 9 வேட்பாளர்களின் பெயர்கள் பட்டியலில் இருக்க வேண்டும் என்பது நியதியாகும்.
இதுவரையில் 3 முஸ்லிம் குழுக்கள் உட்பட 5 சுயேச்சை குழுக்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக வவுனியா தேர்தல் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.இராஜகுகனேஸ்வரன் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச வர்த்தக, கைத்தொழில், வேளாண் அமைப்பின் அமைப்பாளர் ஜி.வி.சகாதேவன் ஆகியோர் தலைமையிலான இரண்டு சுயேச்சை குழுக்களும் இவற்றில் அடங்கும்.
வரும் வெள்ளிக்கிழமை வரையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே அடுத்தடுத்த தினங்களில் நாட்டின் முக்கிய தேசிய கட்சிகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வன்னி மாவட்டத்தில் 2 லட்சத்து, 66 ஆயிரத்து 975 வாக்காளர்கள் இந்தப் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எச் ஐ வி தொற்றை தடுப்பதற்கான வழி குறித்த மருத்துவ முன் மாதிரிப் பரிசோதனை
உலகளாவிய ரீதியில் எச் ஐ வி தொற்றுக்கான சோதனைகள்
நடத்தப்படுவதுடன், ஒருவருக்கு அந்த நோயின் தொற்று ஏற்பட்டவுடனேயே அவருக்கு அந்த வைரசுக்கான எதிர்ப்பு மருந்து வழங்கப்படத் தொடங்கினால், 5 வருடங்களுக்குள் தென்னாபிரிக்காவில் எச்ஐவி தொற்றுவது நிறுத்தப்ப்ட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய் தொற்றுவதை தடுப்பதற்காக மருந்துக்களை பயன்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவிலும், தென்னாபிரிக்காவில் இந்த வருட இறுதிக்குள் மருத்துவ சோதனைககள் நடத்தப்படவுள்ளதாக, ஆராச்சியாளரான, பேராசிரியர் பிரயன் வில்லியம்ஸ் விஞ்ஞான முன்னேற்றத்துக்கான அமெரிக்க அமைப்பின் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
1990 இல் எயிட்ஸ் வைரசுக்கு எதிரான மருந்து அறிமுகப்படுத்தப்பட்டமை எயிட்ஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய தருணம் என்பதுடன், பல மில்லியன் மக்களின் உயிரையும் அது காப்பாற்றியது.
இந்த மருந்து உடலில் உள்ள இந்த வைரஸின் செறிவை குறைத்ததால், அது அடுத்தவருக்கு தொற்றும் தன்மையை இழந்தது.
இந்த மருந்து கடந்த காலங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டமைதான் அந்த நோய் பரவுதை தடுப்பதற்கான செயற்திறன்மிக்க முறையாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகிறார்கள்.
பெரும் பிரச்சினையாகும் மின்னணுக் கழிவுகள்
மின்னணுக் கழிவுகள்கணினிகள் மற்றும் செல்லிடத் தொலைபேசிகள் போன்ற மின்னணுச் சாதனங்கள், அவற்றை பயன்படுத்திய பிறகு தூக்கி வீசப்படுகின்ற போது சுற்றுச்சூழலுக்கும், பொதுச் சுகாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
இவ்வாறு வீசப்படுகின்ற மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்துவதற்கு புதிய விதிகள் தேவை என்று ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டத்தினால், தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தோனேசியாவின் பாலியில் ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டத்தின் ஆட்சிக்குழுவின் சந்திப்பு நடக்கவிருக்கின்ற நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது.
எழுச்சியில் இருக்கின்ற மின்னணு சாதனங்களின் உறுபத்திக்கு, வீழ்ச்சிப் பக்கம் ஒன்றும் இருக்கிறது. குறிப்பாக வளரும் நாடுகளைப் பொறுத்தவரை, அங்கு பயன்பாட்டில் இல்லாத கணினிகள், தொலைபேசிகள், மற்றும், தொலைக்காட்சிகள் போன்றவற்றின் மிண்னணுக் கழிவுகளை மீள் சுழற்சிக்கு உள்ளாக்கும் முயற்சிகளுக்கும், ராக்கட் வேகத்தில் அதிகரித்து வருகின்ற அந்தப் பொருட்களின் விற்பனைக்கும் இடையே ஒரு சமநிலை கிடையாது.
ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டத்தின் மதிப்பீடுகளின்படி, உலகமட்டத்தில் வருடாந்தம் வெளியிடப்படுகின்ற மின்னணுக் கழிவின் அளவு 40 மில்லியன் தொன்களால் அதிகரிக்கிறது. அதிலும் இந்தியா மற்றும் சீனாவைப் பொறுத்தவரை, வீசப்படுகின்ற கணினிகளின் அளவு மாத்திரம் அடுத்த 10 வருடங்களில் 500 வீதத்தால் அதிகரிக்கப்போகிறது.
மின்னணுப் பொருட்கள் உலோகங்களையும், சில தீவிர நச்சு வேதியல் பொருட்களையும் கொண்டுள்ளன. ஆகவே அவற்றை மீள் சுழற்சிக்கு உள்ளாக்கும் நடவடிக்கை சிக்கலானது. ஆனால், சீனா போன்ற சில நாடுகளில் இவை முறையாக மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படாமல், வெறுமனே எரிக்கப்படுவதால், அவற்றில் இருந்து நச்சு வாயுக்கள் சுற்றாடலில் கலக்கின்றன.
மின்னணுக் கழிவு மீள் சுழற்சியகம் ஒன்றுபல நாடுகளில் இத்தகைய மின்னணுக் கழிவுகளை உடனடியாக மீள் சுழற்சிக்கு உட்படுத்தவும், ஒழிக்கவும் ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால், அவை பெரும் மலைபோன்று குவிந்து சுற்றாடலுக்கும், பொதுச் சுகாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கின்றன என்று ஐநா கூறுகின்றது.
மின்னணுக் கழிவுகளை முகாமைத்துவம் செய்யவும், மீள் சுழற்சிக்கு உட்படுத்தவும் முறையாக ஒருங்குபடுத்தப்பட்ட ஒரு முறைமை தேவை என்று கோருகின்ற ஐநாவின் அந்த அறிக்கை, அவற்றை அறிமுகம் செய்வது மிகவும் செலவு மிக்கது என்றும் ஒப்புக்கொள்கிறது.
இருந்தபோதிலும் அத்தகைய நடவடிக்கைகள் மூலம் புதிய தொழில்களை உருவாக்க முடியும் என்றும், அந்தக் கழிவுகளில் இருக்கின்ற தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்பு மிக்க பொருட்களை பிரித்தெடுக்க முடியும் என்றும், இவையெல்லாவற்றுக்கும் மேலாக துய்மையான, சுகாதாரமான சுற்றுச்சூழலை உலகுக்கு வழங்க முடியும் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter