>> Friday, February 12, 2010

அமைதி காக்குமாறு சரத் பொன்சேகா கோரிக்கை
இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களுக்கும் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்கள் பொலிசாரால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மக்களையும் பாதுகாப்புப் படையினரையும் அமைதி காக்குமாறு பொன்சேகா கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அவர் மிகவும் உற்சாகமாக காணப்பட்டதாகவும் அவரது மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
"சரத் பொன்சேகா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை"-அனோமா பொன்சேகா
பொன்சேகா கூட்டுப்படைகளின் தளபதியாக இருந்த போது அரசாங்கத்திற்கு எதிரான அரசியல்வாதிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அவரது மனைவி நிராகரித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை அவரது அலுவலகத்திலிருந்து கடந்த திங்களன்று இழுத்துச் சென்ற பாதுகாப்பு படையினர் அவரைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
அனோமா பொன்சேகாகூட்டுப்படைகளின் தளபதியாக இருந்த போது ஜெனரல் பொன்சேகா அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவையென பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொன்சேகா அவரது வழமையான மருத்துவரை சென்று அணுகுவதற்கான ஏற்பாட்டை உறுதி் செய்து தருமாறு அவரது குடும்பத்தினர் சர்வதேச செஞ்சிலுவை குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களை அமைதி காக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள மூத்த அரச அதிகாரியான ரஜீவ விஜேசிங்க, எதிர்க்கட்சியிலுள்ள சிலர் அமைதியின்மையை ஏற்படுத்தி வன்முறைகளை தோற்றுவிக்க முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் செய்திகள் மற்றும் தகவல் வெளியீட்டு விடயங்களில் அரச அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றமைக்கான அறிகுறிகளும் தென்படுகின்றன.
பதவியை துறப்பதாக தகவல்துறை அமைச்சர் அறிவிப்பு
இதற்கிடையில் பி.பி.சிக்கு கருத்து தெரிவித்த தகவல்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, தம்மை தனது கடமைகளிலிருந்து விடுவிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அனேகமாக ஜனாதிபதியே தமது அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான மகரகம பகுதியில் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டு பொலிசார் அவர்களைக் கலைத்துள்ளனர்.
சரத் பொன்சேகாவுக்கு உதவியதாக கோத்தாபய ராஜபக்ஸ சுமத்திய குற்றச்சாட்டுக்களை அமெரிக்காவும் நார்வேயும் நிராகரித்துள்ளன
கோத்தாபய ராஜபக்ஸஇலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு, நிதி உதவிகளையும் பிற உதவிகளையும் அமெரிக்காவும் நார்வேயும் செய்துள்ளதாக பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களை அந்த நாடுகள் மறுத்துள்ளன.
அமெரிக்காவும், நார்வேயும் ஜெனரல் பொன்சேகாவின் பிரசாரத்துக்காக பெரும் பொருள் செலவிட்டுள்ளதாக தான் நூறு வீதம் நம்புவதாக பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிங்கப்பூர் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய சமீபத்திய செவ்வியில் தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டில் உண்மையேதும் இல்லை என்று அமெரிக்க தூதரகம் மறுப்பு வெளியிட்டுள்ளது. இதே போல மறுப்பு வெளியிட்ட நார்வே தூதரகம், பிற நாடுகளின் தேர்தல்களில் தான் தலையிடுவது கிடையாது என்று கூறியுள்ளது.
அதே நேரம் எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் உரிமைகளையும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் இலங்கை உறுதிசெய்ய வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
"பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்”-திமுக – காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை
தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழ் நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று திமுக – காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை புதுடெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்னவே அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுவிட்டதாகவும் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும் சில எதிர்க்கட்சிகள் கூறிய புகாரைத் தொடர்ந்து தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
புதிய தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நிறைவடைய வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிக்கை கிடைத்தவுடன் எதிர்வரும் 17-ம் தேதி அது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் புதனன்று அறிவித்தது.
அதே நேரத்தில், தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக முதல்வர் கருணாநிதி செவ்வாய்க் கிழமை வெளியிட்ட அறிக்கையில் சூசகமாகக் கண்டித்திருந்தார்.
முன்னதாக, பாமக நிறுவனர் ராமதாஸும் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்திருந்தார்.
மண்டேலா விடுதலை பெற்று 20 வருடங்கள் பூர்த்தி
நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் இருபதாவது ஆண்டு நிறைவு தினத்தை அந்நாட்டு மக்கள் கொண்டாடிவருகின்றனர்.
கேப்டவுன் நகரருகே மண்டேலா விடுதலையாகியிருந்த சிறை வாயிலின் முன்பு நினைவு வைபவம் ஒன்று நடந்துள்ளது.
விக்டர் வெர்ஸ்டர் சிறையின் வாயிற் கதவுக்கு வெளியே, ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் வர்ணங்களான மஞ்சள், கருப்பு, பச்சை ஆகிய நிறங்களில் உடையணிந்த பெருந்திரளான மக்களும், தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்ட பிரமுகர்களும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கூடியிருந்தனர்; ஆடிப் பாடி கொண்டாடினர்.
தென்னாப்பிரிக்காவின் வெள்ளையர் அரசாங்கத்தை எதிர்த்தமைக்காக 1964ல் சிறையில் அடைக்கப்பட்ட மண்டேலா தனது வாழ்க்கையில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளை சிறையில் கழித்த பின்னர், தனது 71ஆவது வயதில் சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.
தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி ஒழிய வேண்டும் என்ற விடுதலை வீரர்களின் கனவு மெய்ப்படவும், நான்கு ஆண்டுகள் கழித்து தென்னாப்பிரிக்காவில் ஜனநாயகம் மலரவும் மண்டேலாவின் விடுதலை வழிவகுத்திருந்தது.
விடுதலைக்குப் பின்னர் நாட்டில் இனவெறி ஆட்சியை அகற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அவர் மிக முக்கியப் பங்காற்றினார். தென்னாப்பிரிக்காவில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடக்க இவை வழி வகுத்தன.
1994ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதல் கருப்பின அதிபரானார் நெல்சன் மண்டேலா.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter