>> Tuesday, February 16, 2010

சரத் பொன்சேகாவின் கைதுக்கான காரணங்களை பௌத்த பீடாதிகளுக்கு தெளிவு படுத்துவோம்”-இலங்கை அரசாங்கம்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கான காரணங்களை நாட்டு மக்களுக்கும் பௌத்த பீடங்களுக்கும் தெளிவு படுத்த உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பொன்சேகாவின் கைதை அரசியல் பழிவாங்கல் என தவறாக வெளிக்காட்ட எதிர்க்கட்சினர் முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.
பொன்சேகாவின் கைதினைத் தொடர்ந்து நாட்டில் நல்லாட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் பாதிப்பேற்பட்டுள்ளதாக தெரிவித்து பெளத்த பிக்குகள் கண்டியில் எதிர்வரும் 18ம் திகதி மாநாடொன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ''இந்த நாட்டில் ஜனநாயகத்திற்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று மக்கள் கருதியதால் தான் கடந்த தேர்தலில் ஜனாதிபதிக்கு 18 லட்சம் அதிகபடியான வாக்குகளை மக்கள் வழங்கினர், சில வேளைகளில் அதனைக் கருத்தில் கொண்டு பெளத்த பிக்குகள் அறிக்கை வெளியிட்டார்களோ தெரியவில்லை'' என்று கூறினார்.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவத்திலிருந்த போது அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாக கூறி அவரை அரச படையினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
இதனையடுத்து கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்ற நிலையில், பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்யுமாறு பௌத்த பீடாதிபதிகள் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ் நகரில் குண்டு வெடிப்பு- சிறார்கள் இருவர் பலி
மாணவர்களின் குடும்பத்தினர்கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இந்த இரண்டு பாடசாலை மாணவர்களும் வீதியில் கிடந்த மர்மப்பொருள் ஒன்றை எடுத்து குத்திப் பார்த்தபோது அது வெடித்ததால் இரண்டு சிறார்களும் ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொழும்புத்துறை புளியடிச்சந்தியில் திங்கட்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஒரு மாணவன் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் ஏனையவர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லையெனவும் இலங்கை பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
“அடிப்படை வசதிகள் கூட இல்லை” – இந்திய ஒலிம்பிக் வீரர் புகார்
சிவா கேசவன் கனடாவின் வான்கூவர் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி நடந்துவருகின்றன. இங்கு குழாய் பாதையில் படுத்த நிலையில் அதிவேகமாய் சறுக்கிச் செல்லும் லூஜ் என்ற போட்டியில் கலந்துகொள்ளும் ஜோர்ஜிய வீரர் ஒருவர் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் நடந்த பயிற்சிகளின்போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த லூஜ் பந்தயத்தில் இந்திய வீரர் ஒருவரும் பங்குபெற்றிருந்தார். சிவா கேசவன் என்ற இவ்வீரர் , நான்கு முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்றவராவார்.
ஆனால் இம்முறை லூஜ் ஒற்றையர் பிரிவில் அவரால் 27ஆவது இடத்தையே பெற முடிந்துள்ளது. இந்தியாவின் சார்பில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் மூன்று வீரர்களில் ஒருவரான சிவா கேசவன், தனக்கு வழங்கப்பட்ட சீருடை தொடர்பிலும், வீரர்களுக்கு இந்திய விளையாட்டு நிர்வாகிகள் செய்து தந்துள்ள வசதிகள் தொடர்பிலும் குறைகளை வெளியிட்டுள்ளார்.
தரம் குறைந்த சீருடைகளே தனக்கு வழங்கப்பட்டிருந்ததால் இந்த வீரர் துவக்க விழாவில் இந்திய அணிக்கான சீருடை இன்றி கலந்துகொண்டிருந்தார். இந்த சர்ச்சையை அடுத்து இந்திய வீரர்களுக்குத் தேவையான சீருடைகளை கனடாவில் விளையாட்டுப் உபகரணங்கள் விற்கும் இந்தியர் ஒருவர் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கனடாவில் உள்ள ஒரு உள்ளூர் பஞ்சாபி வானொலி மூலமாக இந்திய வீரர்களுக்கு நிதி திரட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறதது. கேசவன் பயன்படுத்துகின்ற லூஜ் எனப்படுகிற சறுக்குப் படுக்கை உடைந்துபோய் பழுது பார்க்கப்பட்ட நிலையில் இருந்துள்ளதாகத் தெரியவந்ததை அடுத்து அவர் புதிய சறுக்குப் படுக்கை வாங்க கனடாவில் வாழும் இந்திய சட்டத்தரணிகள் ஐந்து பேர் நாலரை லட்சம் ரூபாய் வரையில் நிதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிவா கேசவன் அல்லாது அல்பைன் பனிச்சறுக்கு போட்டியில் கலந்துகொள்ளும் ஜாம்யங் நம்ஜியால் என்பவரும், நெடுந்தூர பனிச்சறுக்கு போட்டியில் கலந்துகொள்ளும் டாஷி லண்டுப் ஆகியோரும் வான்கூவர் வந்துள்ள இந்திய அணியில் அடங்குவர்.
பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் தொடர்பில் சட்டவிதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லையென குற்றச்சாட்டு
வெளியேற்றப்படும் தஞ்சம் கோருவோர்பிரிட்டனில் தஞ்சம் கோருவோரில் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவோர் தொடர்பில் முறையான சட்டவிதிகளுக்கு ஏற்ப நடாத்தப்படுவதில்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டு தப்பிவந்து பிரிட்டனில் தஞ்சம் கோருபவர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்படக்கூடாது என்பதே பிரிட்டனின் குடியேறிகள் தொடர்பான தலைமைச் செயலகத்தின் சட்டவிதி.
இதனால் தடுப்புக்காவலுக்கு அனுப்பப்படும் ஒவ்வொருவரும் 24 மணித்தியாலங்களில் மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படுவர் என தலைமைச் செயலகம் கூறுகிறார்.
ஆனால் சி்த்திரவதைகளுக்குள்ளான பலர் மருத்துவ பரிசோதனைகளுக்கு அனுப்பப்படாமல் நீண்ட காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்னும் பலர் சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவர்களால் அடையாளம் காணப்பட்ட பின்னரும் சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் தஞ்சம் கோரல் தொடர்பான சட்டவிதிகள் பிரிட்டனால் சிறந்த முறையிலேயே கடைப்பிடிக்கப்படுவதாக பிரிட்டனின் குடியேற்றத் துறை அமைச்சர் பி.பி.சியிடம் தெரிவித்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter