>> Tuesday, February 9, 2010

சரத் பொன்சேகா திடீர் கைது
இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா இன்று, திங்கட்கிழமை இரவு, கொழும்பில் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தலைநகரில் அவரது அலுவலகத்தில் நுழைந்த ராணுவப் போலிசார் அவரைக் கைது செய்து அழைத்துச்சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சரத் பொன்சேகா ராணுவக் குற்றங்களை இழைத்திருக்கிறார் என்று முதலில் அரசு தரப்பில் கூறப்பட்டது.
கைது செய்யப்பட்ட போது, சரத் பொன்சேகா பல அரசியல் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தார்.
சரத் பொன்சேகா மிகவும் மோசமான, அருவருப்பான முறையில் இழுத்துச்செல்லப்பட்டார் என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கூறினார்.
ராணுவப்போலிசார் இந்த கைது குறித்து அப்போது எந்த காரணங்களையும் அவரிடம் தெரிவிக்கவில்லை என்று கூட்டத்திலிருந்த அரசியல் தலைவர்கள் கூறினர்.
கைது செய்யப்படுவதற்கு முன்னர் , திங்கட்கிழமை,ஜெனரல் சரத் ஃபொன்சேகா இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றங்கள் குறித்த விசாரணைகள் வருமானால் அப்போது, தான் சாட்சியம் அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
"எனக்கு தெரிந்தது, நான் கேள்விப்பட்டது, எனக்கு கூறப்பட்டது ஆகியவை குறித்து நான் அவசியம் வெளிப்படுத்துவேன். போர் குற்றங்களை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உண்மைகளை சொல்லாதவர்கள் துரோகிகள். போர் குற்றங்களை செய்தவர்கள் யாரையும் நான் காப்பாற்றப் போவதில்லை",என்று தெரிவித்தார் ஜெனரல் சரத் ஃபொன்சேகா.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசு போர் குற்றங்களை செய்தன என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்காவும் குற்றஞ்சாட்டி வருகின்றன.
சரத் ஃபொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க
சரத் ஃபொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது என்கிரார் ரணில்இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் ஃபொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கையின் எதிர்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க
அவரது கைது இராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்தார். அவரது கைது என்பது நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்றும் அவர் கூறுகிறார்.
அவர் கைது செய்யப்பட்டுள்ளதை தாங்கள் கண்டிப்பதாகவும் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். இதுகுறித்து பல்தரப்பினருடனும் தான் பேசி வருவதாகவும்,அனைவரும் இதே கருத்தை கொண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
இது சில இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஜனநாயக விரோதச் செயல் என்றும் அவர் கூறுகிறார். அவர் மீது ஏதாவது குற்றசாட்டுகள் இருந்தால் அவை வழக்கமான நீதிமன்றங்கள் முன்னர் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் கருத்து வெளியிடுகிறார்.
அடிப்படை உரிமைகளை மீறும் செயல்
இலங்கை ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவரும்இராணுவச் சட்டங்களின் கீழ் இந்தச் செயல் மேற்கொள்ளப்படுகிறது என்பது சட்ட விரோதமானது என்று கூறும் ரணில் அவர்கள் நடு இரவில் ஒருவரை கைது செய்துவது என்பது அடிப்படை உரிமைகளை மீறும் ஒரு செயல் எனவும் கூறுகிறார்.
ஜெனரல் சரத் ஃபொன்சேகாவின் கைது நாட்டில் மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும், உலகம் முழுவதிலிருந்தும் இதற்கு கண்டன்ம் எழுப்பப்படும் என்றும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது முறையற்றது எனவும் ரணில் விக்ரமசிங்க பிபிசியிடம் தெரிவித்தார்.
போர் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வருமானால் சாட்சியம் அளிக்க தயார் என சரத் ஃபொன்சேகா தெரிவித்தது கூட அவரது கைதுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக தனிப்பாடசாலை
இடம் பெயர்ந்த மாணவர்களுக்கு தனிப்பாடசாலை
இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் இருந்த பின்னர், வவுனியாவில் தமது உறவினர் நண்பர்களது வீடுகளில் தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் தனியான பாடசாலை ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இந்த மாணவர்கள் கடந்த வாரம் வரையில் வவுனியா தெற்கு கல்வி வலயப் பாடசாலைகள் பலவற்றில் மாலை நேர விசேட வகுப்புகளில் கல்வி கற்று வந்ததாகவும், கடந்த வாரம் அவர்கள் அனைவரையும் தனியான ஒரு பாடசாலைக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவித்ததாகவும் பெற்றோர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
எனினும் மாணவர்களின் கல்வி நலனை முன்னிட்டே இடம்பெயர்ந்த மாணவர்களைத் தனியான ஒரு பாடசாலையில் வைத்து கல்வி கற்பிப்பதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் கூறுகின்றார்.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
போதைப்பொருள் கடத்தல்: இந்தியர்கள் உட்பட ஐவருக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை
போதைப்பொருட்கள் கடத்தியதாக தண்டனை
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருள் கடத்தி வந்தார்கள் என்ற குற்றத்திற்காக நான்கு இந்தியர்கள் உட்பட ஐந்துபேருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று ஆயுட்காலச் சிறைத்தண்டனை வழங்கியிருக்கின்றது.
கடந்த 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தலைமன்னார் கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் மணற்திட்டொன்றருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய மீன்பிடி படகு ஒன்றினை சோதனையிட்ட போது, நான்கு பிரிவுகளாக நேர்த்தியாகச் சுற்றப்பட்டிருந்த ஒரு கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் இருந்ததைக் கண்டு, படகிலிருந்த ஐந்து பேரைக் கைது செய்து மன்னார் பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் நீதிமன்ற உத்தரவின்பேரில் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, 81.8 கிராம் நிறையுள்ள தூய ஹெரோயின் இருந்தமை கண்டறியப்பட்டதாக நீதிமன்ற விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
முதலாவது எதிரியாகிய இலங்கையர் ஹெரோயின் போதைப்பொருளை தமது உடைமையில் வைத்திருந்தார் என்பதும், அதனை இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு இந்தியப் பிரஜைகள் உதவியாக இருந்தார்கள் என்பதும் வழக்கு விசாரணைகளின்போது நிரூபணமாகியதையடுத்து, இந்தத் தண்டனை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பாக்குநீரிணை ஊடாக போதைப்பொருள் கடத்தி வரும் சம்பவங்கள் பல கண்டறியப்பட்டிருக்கின்ற போதிலும், இந்தியப் பிரஜைகளுடன் இலங்கைப் பிரஜை சம்பந்தப்பட்ட நிலையில் இரு நாட்டவர்களுக்கும் நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீட்டு சட்டம் தள்ளுபடி
"முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு தவறானது", ஆந்திர உயர்நீதிமன்றம்
ஆந்திரப் பிரதேச அரசு, அம்மாநிலத்தில் உள்ள சமூக மற்றும் கல்வி ரீதியாக பின் தங்கிய முஸ்லீம்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், நான்கு சதவீத இடஒதுக்கீட்டை வழங்கக் கொண்டுவந்த சட்டத்தை , ஆந்திர உயர் நீதிமன்றம் செல்லாதது என்று இன்று தீர்ப்பளித்திருக்கிறது.
இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சாதிக், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைத் திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட அரசியல் முடிவுதான் இது என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு சமூகம் பின் தங்கியே இருக்கும். இதை சரி செய்யவேண்டிய நடவடிக்கைகள் அவசியம். காலங்கடந்து எடுக்கபப்ட்ட இந்த முடிவு முன்பே எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்றார்.
சாதி என்ற இந்து மத அமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களையவே இந்த இட ஒதுக்கீடு என்றும், இந்த இட ஒதுக்கீடு, சாதிபேதமற்ற மதமாகக் கருதப்படும் இஸ்லாமிய மக்களுக்கு தரப்படுவதில் நியாயம் இல்லை என்ற வாதத்துக்கு பதிலளித்த சாதிக், இந்த வாதம் தவறானது. பிற்பட்டவர்கள் என்றுதான் பார்க்கவேண்டுமே தவிர அவர்கள் எந்த சாதியில் அல்லது எந்த மதத்தில் இருக்கிறார்கள் என்று பார்க்கக்கூடாது என்றார்.
பொதுவாக இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர், கே.எம்.விஜயன், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு என்பதே தவறல்ல. ஆனால், அதை அமல் படுத்தும் போது, யார் பிற்படுத்தப்பட்டவர் என்பதை விஞ்ஞான ரீதியாகக் கண்டறிய தவறிவிட்டதாக, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. எனவே இட ஒதுக்கீடு ஆரம்பித்த காலந்தொட்டு இருக்கின்ற, பிற்படுத்தப்பட்டவர் யார் என்பதை எப்படி முடிவு செய்வது என்பதில்தான் பிரச்சினையே இருந்து வந்திருக்கிறது என்றார்.
தெற்காசிய போட்டியில் இலங்கையின் செயற்பாடு திருப்திகரமாக இல்லை-இலங்கை ஒலிம்பிக் சங்கம்
டாக்கா போட்டிகளின் சின்னமான குருவிவங்கதேச தலைநகரான டாக்காவில் நடைபெற்று வரும் 11 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணியின் செயற்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தின் தலைமைச் செயலரான மேக்ஸ்வெல் டி சில்வா தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதுவரை நடைபெற்ற எந்தவொரு பிராந்திய விளையாட்டுப் போட்டிகளுக்கும் இலங்கை அனுப்பிய மிகப் பெரிய அணி இதுதான். அதன் அடிப்படையில் பார்க்கும் போது தாங்கள் இன்னமும் கூடுதலான பதங்கங்களை பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார்.
தமது அணியின் ஆயுத்தங்களில் குறைபாடு இருந்ததே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததற்கு காரணம் என்றும் அவர் கூறுகின்றார். இலங்கை அரசும்,நாட்டின் பல விளையாட்டுச் சங்கங்களும் திட்டங்களை தீட்டினால் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்துடன் பேசி அதற்குரிய உதவிகளை இலங்கை ஒலிம்பிக் சங்கம் செய்யும் எனவும் மேக்ஸ்வெல் டி சில்வா கூறுகிறார்.
வடகிழக்கு பகுதியில் விளையாட்டு வளர்ச்சி தேவை
இலங்கையில் பல ஆண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் விளையாட்டு துறையின் வளர்ச்சி மிகவும் தேவை என மேக்ஸ்வெல் டி சில்வா அவர்களும், இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீரருமான ஜூலியன் போலிங் அவர்களும் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் இருந்த சூழல் காரணமாக அங்கிருந்த சிறார்களுக்கு விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது என்று கூறும் ஜூலியன் போலிங், பெரிய விளையாட்டு வீரர்களை உருவாக்குவது தற்போது முக்கியமல்ல என்றும் வாய்ப்பை இழந்த சிறார்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே முக்கியம் எனவும் கூறுகின்றார்.
வடபகுதியில் விளையாட்டு துறைக்காக திட்டங்கள் தீட்டப்பட்டால் சர்வதேச நிறுவனங்கள் உதவி செய்ய முன்வரும் எனவும் இருவரும் கூறுகின்றனர்

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter