>> Tuesday, May 11, 2010
பார்வதி அம்மாள்
பிரபாகரன் தாயார் இந்தியா வர அனுமதி
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் ஆறு மாதம்வரை தங்கி சிகிச்சை பெற மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது என முதல்வர் கருணாநிதி தமிழக சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு சிகிச்சைக் காலத்தில் பார்வதி அம்மாள் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பது ஒரு முக்கிய நிபந்தனையாகும்.
"கடந்த ஏப்ரல் 16ஆம் நாளன்று சிகிச்சை பெறவென உரிய விசா பெற்று சென்னை வந்த அவரை விமான நிலைய குடியேற்றத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, அது பெரும் அரசியல் பிரச்சினையாகி, அவர் திருப்பி அனுப்பப்பட்டதே தனக்குத் தெரியாது, பிரபாகரனின் பெற்றோரை இந்தியா வர அனுமதிக்கக்கூடாது என்ற முந்தைய அ இ அதிமுக அரசின் ஆலோசனையில் பேரில் மத்திய அரசு வெளியிட்ட ஆணையின் விளைவே அவர் திருப்பி அனுப்பப்ட்டமை ஆகும், இனிமேலும் அவர் வர விரும்பினால், மத்திய அரசிடம் தான் பரிந்துரைக்கத் தயார்" என்று முதல்வர் கூறியிருந்தார்
மாநில அரசு தன் நிலையை மாற்றிக்கொண்டால், பார்வதி அம்மாளை அனுமதிக்கத்தயார் என மத்திய அரசு கூறியிருந்தது.
பார்வதி அம்மாள் மறுபடி வர விரும்பினால் அவரது கோரிக்கை மீது சென்னை உயர் நீதிமன்றமும் விரைந்து முடிவெடுக்கவேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு உத்திரவிட்டது.
அவ்வாறு பார்வதி அம்மாளும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் அண்மையில் புதுடில்லி சென்றபோது தான் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடமும் பார்வதி அம்மாள் இங்கு வர அனுமதிக்கவேண்டும் என வற்புறுத்தியதாகவும், அதன் பின்னர் இப்போது பார்வதி அம்மாளை அனுமதிக்கலாம் என மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு மத்திய அரசு எழுதியிருப்பதாகவும் சட்டமன்றத்தில் கருணாநிதி கூறினார்.
"பார்வதி அம்மாளின் தமிழக வருகை மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இருக்க வேண்டும்; அவர் மருத்துவமனையிலேதான் தங்க வேண்டும் தவிர, வேறெங்கும் தங்கக் கூடாது;அரசு மருத்துவமனையிலே அவர் சிகிச்சை பெற விரும்பினால், தமிழக அரசு அதற்குத் தேவையான உதவிகளை எல்லாம் செய்திட வேண்டும்; அவர் எந்த அரசியல் கட்சியினரோடோ, குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு பங்கு வைத்திருப்பவர்களோடோ, எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது; பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று அந்தக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது" எனமுதல்வர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment