>> Tuesday, May 4, 2010


இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ஷ

ஊடகவியலாளர் மீது இலக்கு



பத்திரிகை சுதந்திர தினத்தைக் குறிக்கும் முகமாக எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற ஊடக சுதந்திர அமைப்பு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஊடக சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்று தாங்கள் கருதும் தனிநபர்கள் மற்றும் குழுக்களின் பெயர்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

உலகின் அனைத்து பாகங்கள் பற்றியும் இந்தப் பட்டியலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தங்களுடைய மதிப்பீட்டில் யார் யார் ஊடக சுதந்திரத்துக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் எப்படியான சேதத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று இந்த அமைப்பு அதில் விபரித்துள்ளது.

எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின் தொனி சாடும் விதமாகவும் கேலி செய்யும் விதமாகவும் இருகிறது.

ஆயுதக் குழுக்கள், போதை மருந்து கடத்துபவர்கள், குற்றக்குழுக்கள், அதிபர்கள் மற்றும் ஏனையவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அது விபரமாக தந்திருக்கிறது.

உதாரணமாக நைஜீரியாவை எடுத்துகொண்டால், அந்த நாட்டின் பொலிஸ் தலைமை அதிகாரியான ஒக்பொனோ ஒனோவா அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு தொந்தரவு செய்பவராக அந்த நாட்டின் தரப்பில் பட்டியலிடப்பட்டுள்ளார்.


ஒனோவா அவர்கள் சடத்தை நிலைநாட்டும் சிறந்த அதிகாரியாகவும், வியத்தகு சாதனைகளை செய்தவராகவும் அந்த நாட்டால் கௌரவிக்கப்பட்டவர் என்று சுட்டிக்காட்டி அந்த அறிக்கை கேலி செய்கிறது.



அவருக்கு எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு '' பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குபவர்'' என்ற பட்டத்தை தனது அறிக்கையில் வழங்கியிருக்கிறது.

சோமாலியாவின் அல் சபாப் மற்றும் ஹிஸ்ப் அல் இஸ்லாம் ஆகிய அமைப்புக்களுடன், ஸ்வாசிலாந்தின் மன்னர் மூன்றாவது ஸ்வாதியும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ஆசியாவைப் பொறுத்தவரை பத்திரிகையாளர்களுக்கு எதிரானவர்களின் பட்டியலில், வடகொரிய மற்றும் பர்மிய தலைவர்கள் திகழ்கிறார்கள்.

தகவல் பரிமாற்றத்தை தடுப்பவராக, 2008 இல் நடந்த அமைதியீனங்கள் தொடர்பாக திபெத்தியர்களால் வெளியிடப்பட்ட படங்கள் மற்றும் மற்றும் வீடியோக்கள் பிறரைச் சென்றடையா வண்ணம் தடுத்தவராக சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் பதியப்பட்டுள்ளார்.

இலங்கையில் கோத்தாபாய

இலங்கையைப் பொறுத்தவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தாபாய ராஜபக்ஷ அவர்கள் வெளிப்படையாகவே தொடர்பூடகங்களுக்கு மோதல்போக்கைக் கடைப்பிடிப்பவராக சித்தரிக்கப்பட்டுள்ளார்.

2009 மே மாதத்தில் உள்நாட்டுப் போர் முடிவடைந்துவிட்ட போதிலும், இலங்கை மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களை இலக்கு வைப்பதை அவர் நிறுத்தவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.



ஒரு செய்தியாளர் கடத்தப்பட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ கோத்தபாய அவர்கள் பகிரங்கமாக அந்த செய்தியாளரின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவார் என்றும் அது கூறுகிறது.

ஸ்பெயினின் பஸ்கியூ தீவிரவாத குழுவான எட்டா மற்றும் இத்தாலியில் உள்ள சில திட்டமிட்டுச் செயற்படும் குற்றக் குழுக்கள் ஆகியவை தம்மைப் பற்றி செய்தி வெளியிடும் செய்தியாளர்களை அச்சுறுத்தும் அமைப்புக்களாக திகழுகின்றன.

குறைந்தது 33 பாலத்தீன செய்தியாளர்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால், உடல் ரீதியாக தாக்கப்பட்டதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அத்துடன் பாலத்தீன தீவிரவாதக் குழுவான ஹமாஸும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter