>> Monday, May 17, 2010
அரசியலில் நடிகை குஷ்பு
தமிழ் திரைப்பட நடிகை குஷ்பு
தமிழ் திரைப்பட நடிகை குஷ்பு அரசியலில் பிரவேசம் செய்திருக்கிறார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. கருணாநிதி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
வட இந்தியாவைச் சேர்ந்த குஷ்வு, தமிழ்நாட்டுக்கு வந்து திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது, தமிழ் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
திருமணத்துக்கு முன்பு பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் தமிழகத்தில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தின.
அவருக்கு எதிராக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. பல ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்ட குஷ்புவுக்கு, சமீபத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் தீர்வு கிடைத்தது. அவருக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதன்பிறகு ஊடகங்களுக்கு பேட்டியளித்த குஷ்பு, அடுத்த கட்டமாக தான் அரசியலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார்.
தான் காங்கிரஸுக்கு நெருக்கமானவர் என்று கருத்துத் தெரிவித்திருந்தார் குஷ்பு. அதனால் அவர் அந்தக் கட்சியில்தான் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரை வரவேற்பதாக தமிழகத்தில் பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் வெளிப்படையாக அறிவித்தார்கள்.
இந்த நிலையில், குஷ்பு இன்று மாலை சென்னையில் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து, முறைப்படி திமுகவில் இணைந்து கொண்டார்.
அவர் கட்சியில் இணைந்தது குறித்துக் கருத்துத் தெரிவித்த கருணாநிதி, ``பெண்களின் முன்னேற்றத்துக்கும் முற்போக்குக் கருத்துக்களுக்காகவும் வாதாடக் கூடிய ஆற்றல் படைத்தவர் குஷ்பு’’ என்றார்.
திமுகவில் இணைந்ததற்கான காரணம் குறித்து நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட வேண்டும் என்ற தனது எண்ணங்களுக்குப் பொருத்தமான கட்சி திமுக என்றும், ஏற்கனவே அந்தக் கட்சியில் பெண்கள் மேம்பாட்டுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment