>> Tuesday, May 11, 2010
ஆனைமுடியில் அரிய ஆரஞ்சு தவளை
தென்னிந்தியாவின் ஆனைமுடி மலை முகட்டில் அரிய வகை புதிய தவளை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பளிச்சென்று தெரியும் சிவப்பு ஆரஞ்சு வண்ணத்தில் இந்தத் தவளை இருக்கிறது.
ஆனைமுடி மலையுச்சியில் மூன்று சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கும் குறைவான பகுதியிலேயே இந்தத் தவளை இனம் வாழ்கிறது.
ஆயிரத்துத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த தவளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தவளைக்கு ராவ்செஸ்டர்ஸ் ரெஸ்பிளெண்டென்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
புதுடில்லி பல்கலைகழகத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ்.டி.பிஜு தலைமையில் நான்கு பேர் கொண்ட அறிவியலாளர் குழு இந்தத் தவளை இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தத் தவளைகளின் உடலின் மேற்பகுதியில் இருந்த சில சுரப்பிகளும் வீக்கங்களும் அவற்றை தேரையைப் போலக் காட்டியதாக அவர் கூறுகிறார்.
மரத்தில் வாழக்கூடிய தவளைகளில் இந்த இனத்துக்கு மட்டுமே இப்படியான சுரப்பிகள் இருக்கின்றன. பெரிது பெரிதாக இருக்கும் சுரப்பிகளின் பயன் புரியாத புதிராகவே உள்ளது. அது குறித்த ஆய்வில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம்.
டாக்டர் எஸ்.டி.பிஜு
2001 ஆம் ஆண்டு இந்த இனத்தை முதலில் தான் கண்டதாகவும், இது புதிய இனம்தான் என்பதை பல கோணங்களிலும் உறுதிப்படுத்த தனக்கு 7 ஆண்டுகள் ஆகியது என்றும் அவர் கூறுகிறார்.
"சீனா, லாவோஸ், கம்போடியா வியட்நாம், இந்திய துணைக்கண்டத்தில் இருக்கும் நாடுகளில் வாழும் தவளை இனங்களுடன் இந்தத் தவளையை ஒப்பிட்டு பார்த்து, பலவிதமாக ஆராய்ந்து, இறுதியில் கரண்ட் சயின்ஸ் எனப்படும் அறிவியல் சஞ்சிகையில் இந்தக் கண்டுபிடிப்பினை வெளியிட்டோம்." என்கிறார் பேராசிரியர் பிஜு.
இந்தியாவில் தவளையின ஆய்வுகளில் முன்னோடியாக இருந்த டாக்டர் சி ஆர் நாராயண் ராவ் அவர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்தத் தவளையின் பெயரில் ராவ் சேர்க்கப்பட்டுள்ளது என்று டாக்டர் பிஜு சுட்டிக்காட்டுகிறார்.
மிகச்சிறிய ஒரு பகுதியில், மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் இப்படியான ஒரு இனம் அழிவின் விளிம்பில் வாழ்ந்துவருவது அறிவியலாளர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது.
உலகில் மொத்தத்தில் ஆறாயிரத்துக்கும் கூடுதலான தவளை இனங்கள் இருப்பதாக கண்டுதுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பாதியளவு ஏதோ ஒரு வகையில் அச்சுறுதல்லுக்கு உள்ளாகியுள்ளன.
0 comments:
Post a Comment