>> Wednesday, May 12, 2010
இந்தியாவின் நிபந்தனைகளை ஏற்க பிரபாகரனின் தாய் மறுப்பு
பார்வதியம்மாள்
விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று அவரின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவதற்கு இந்திய அரசு விதித்த நிபந்தனைகள் அவரது குடும்பத்தினருக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் அவர் இந்தியாவுக்கு செல்லவேண்டாம் என்று அவர்கள் முடிவெடுத்துள்ளதாக இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இந்திய அரசு, பார்வதியம்மாள் இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெற விரும்பினால், அரசு பாதுகாப்பில், அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவார் என்று விதித்த நிபந்தனை, அவர் தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெற முடியாத நிலையை ஏற்படுத்தியதாலும், குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அவரை சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனை காரணமாகவும், இந்த முடிவை குடும்பத்தினர் எடுத்துள்ளனர் என்று சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரு அரசியல் சர்ச்சைக்குள் பார்வதியம்மாள் சிக்குவதை அவரது குடும்ப உறுப்பினர்கள் விரும்பவில்லை என்று சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்களை சந்திக்கக்கூடாது என்பது இந்தியாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக இருக்கலாம், அது புரிந்து கொள்ளக்கூடியதே ஆனால் குடும்ப நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சந்திக்கூடாது என்ற நிபந்தனையை அவரது குடும்பத்தினர் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் கவனிக்கவேண்டும் என்றார் சிவாஜிலிங்கம்.
பார்வதியம்மாளை இலங்கையில் தற்போது தனது கண்காணிப்பில் வைத்து மருத்து சிகிச்சை செய்து வருவதாகவும், ஒரு வார காலத்தில் அவரை யாழ் குடா நாட்டில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு சென்று சிகிச்சை தொடர முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பார்வதியம்மாளின் மகள் கனடாவிலும், மற்றொரு மகன் டென்மார்க்கிலும் இருக்கும் நிலையில், அந்த நாடுகளுக்கு அவரை கொண்டு சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்று கேட்டதற்கு பதிலளித்த சிவாஜிலிங்கம், கனடாவிற்கு அவரை கொண்டு சென்று மருத்து சிகிச்சை தர விசா கோரப்பட்டிருக்கிறது என்றார்.
எம்.கே.சிவாஜிலிங்கம்
சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு சிகிச்சை பெறுவதற்காக உரிய அனுமதி பெற்று மலேசியாவில் இருந்து வந்த பார்வதியம்மாள் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். பிறகு இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்தார். திமுக உள்ளிட்ட கட்சிகள் பார்வதியம்மாள் சிகிச்சை பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
இந் நிலையில் சில நிபந்தனைகளுடன் பார்வதியம்மாளுக்கு இந்தியாவுக்கு வர அனுமதி வழங்கப்படும் என்று இந்திய அரசு தெரிவித்தது. பார்வதியம்மாள் அரச செலவில் அரசு மருத்துமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்களை அவர் சந்திக்கக் கூடாது என்பனவை அடங்கும்.
திமுக நிலை
இந்த விடயத்தை திமுக ஒரு மனித நேயப் பிரச்சினையாகப் பார்ப்பதாகத் தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி கே எஸ் இளங்கோவன் தமிழோசையிடம் தெரிவித்தார். இந்திய அரசு பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில நிபந்தனைகளை விதித்திருக்கலாம் என்றும் நிபந்தனைகளை நீக்குமாறு கோரிககை வந்தால் அதை திமுக தலைவர் பரிசீலிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment