>> Thursday, May 13, 2010
தொழிற்கட்சியின் சின்னம் ரோஜா மலர்
தொழிற்கட்சியின் தலைமைப்பதவி யாருக்கு?
பிரிட்டனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இதுவரை ஆளும் கட்சியாக இருந்த தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டி ஆரம்பித்துள்ளது.
பிரதமராக இருந்த கார்டன் பிரவுன் அக்கட்சியின் தலைவராகவும் இருந்தார். நேற்று மாலை பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தபோது கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் தான் உடனடியாக விலகுவதாக அவர் அறிவித்தார்.
இதையடுத்து ஹாரியட் ஹார்மன் அம்மையார் தற்காலிகத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். தொழிற்கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த போட்டியில் தான் இல்லை என்று உள்துறையின் முன்னாள் செயலர் ஆலன் ஜான்சன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தொழிற்கட்சியின் உள்ளே தவிர்க்க முடியாத ஏமாற்றமும், பரஸ்பர குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இருந்தபோதிலும் எல்லாம் முடிந்து விட்டது என்கிற ஒரு நிம்மதியும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ளது.
13 ஆண்டுகள் பதவியிலிருந்த கட்சிக்குள் மீண்டும் ஒரு ஒருங்கிணைப்பு, மறுசிந்தனை மற்றும் புதிய உத்வேகம் தேவை என்கிற எண்ணமும் எழுந்துள்ளது.
நடைபெற்று முடிந்த தேர்தலில் தொழிற்கட்சி முற்றிலுமாக அழித்தொழிக்கப்படவில்லை, அது மீண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்றும், கடுமையான வெட்டுக்களை கொண்டு வர நிர்பந்திக்கப்பட்டுள்ள கூட்டணி ஆட்சியை சுலபமாக எதிர்க்க முடியும் என்கிற கருத்தும் கட்சிக்குள் இருக்கின்றது.
இளைய தலைமுறைக்கு வாய்ப்பு
டேவிட் மிலிபாண்ட்
இந்நிலையில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளவயதினர் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டின் என்கிற கருத்தும் கட்சிக்குள் உறுதியாக இருக்கின்றது.
இதன் அடிப்படையில் கட்சித் தலைவர் பதவிக்கான போட்டி எட் பால்ஸ் மற்றும் டேவிட் மிலிபாண்ட் ஆகியோரிடையே இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.
ஆனால் டேவிட் மிலிபாண்ட்டின் இளைய சகோதரரான எட் மிலிபாண்ட், ஆண்டி பர்ண்ஹாம் மற்றும் ஜான் க்ரூதாஸ் ஆகியோரும் தலைமைப் பதவிக்கு போட்டியாளராக பார்க்கப்படுகிறார்கள்.
சிக்கலான தேர்தல்
பிரவுனுடன் எட் பால்ஸ்
எனினும் தற்போதைய நிலையில், இடைக்கால தலைவராக ஹாரியட் ஹார்மேன் தொழிற்கட்சியின் தலைவராக பொறுப்பேற்கிறார். அடுத்ததாக கட்சியின் தேசிய செயற்குழு கூடி தலைமைப் பதவிக்கான தேர்தல் குறித்த ஒரு அட்டவணையை அடுத்த வாரம் வரைவார்கள். அந்தக் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் ஒரு சிக்கலான விடயம். ஏனென்றால் வாக்களிக்கும் உறுப்பினர்கள் பல்தரப்பைச் சேர்ந்தவர்கள்.
வாக்கு என்பது, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடையே பிரிந்து கிடக்கிறது. இப்படியான சூழலில் தேர்தல் முடிவடைவதற்கு பல மாதங்கள் ஆகலாம்.
0 comments:
Post a Comment