>> Friday, May 7, 2010
தமிழில் இணைய முகவரிகள்
அரபு மொழியில் எகிப்து நாட்டின் தகவல்தொடர்பு அமைச்சக இணைய முகவரி
இதுவரை லத்தீன் மொழிக்குடும்ப எழுத்துக்களில் மட்டுமே இருந்து வந்த இணைய முகவரிகள் இனி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இருக்கலாம் என்கிற மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இணையதள முகவரிகள் லத்தீன் மொழிக்குடும்ப எழுத்துக்களில் மட்டுமே இருக்க முடியும் என்கிற தற்போதைய நடைமுறையை மாற்றியிருப்பதாக உலக அளவில் இணையத்தை கட்டுப்படுத்தும் ஐகேன் என்கிற சர்வதேச இணைய முகவரிகள் மற்றும் எண்களை ஒதுக்கீடு செய்யும் அமைப்பு அறிவித்திருக்கிறது.
இதன் அடுத்த கட்டமாக தமிழ் உள்ளிட்ட 21 மொழி எழுத்துக் களை பயன்படுத்தி இணைய தள முகவரிகளை அமைக்க முடியும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இணையத்தின் வரலாற்றில் இந்த மாற்றம் என்பது முக்கிய மைல்கல்லாக வர்ணிக்கப்படுகிறது.
இந்த மாற்றத்தின் முதற்படியாக லத்தீன் மொழிக்குடும்ப எழுத்துக்கள் இடம்பெறாத இணைய முகவரிகள் கொண்ட கணிப்பொறியை ஐகேன் அமைப்பு துவக்கிவைத்தது.
இதன் விளைவாக எகிப்து, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் தனித்தன்மையை குறிக்கும் இணைய முகவரி அடையாளங்கள் முழுக்க முழுக்க அரபு எழுத்துருக்களால் எழுதப்பட்டு இணைய பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.
இதன் அடுத்த கட்டமாக, சீனம், தாய் மற்றும் தமிழ் உள்ளிட்ட பல மொழி எழுத்துக்களில் இணைய முகவரிகள் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக, இருபது நாடுகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்திருப்பதாகவும், இவையெல்லாம் ஐகேன் அமைப்பின் வேகமான பரிசீலனையில் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக பார்க்கையில் இந்த மொழிகளில் இணைய முகவரிகள் உடனடியாக சாத்தியம் என்றாலும், எல்லா கணினிகளிலும் எல்லா நாடுகளிலும் இவை உடனடியாக சரியாக நடைமுறைக்கு வருவதில் சில சிக்கல்கள் இருக்கலாம் என்றும் ஐகேன் அமைப்பு கூறியுள்ளது.
ஆனால், இவையெல்லாம் ஆரம்பகால நடைமுறை சிக்கல்கள் என்று கூறியுள்ள ஐகேன் அமைப்பு, வெகு விரைவில் இந்த சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு உலக மொழிகளில் பலவற்றில் இணைய முகவரிகள் நடைமுறைக்கு வரும் என்று கூறியிருக்கிறது.
இணையத்தில் தமிழ் வளர்வதற்கு ஐகேனின் இன்றைய அறிவிப்பு பெரும் உதவியாக இருக்கும் என்று கூறுகிறார் தமிழக அரசின் தமிழ் இணைய வளர்ச்சிக்கான குழுவின் தலைவரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான முனைவர் அனந்தகிருஷ்ணன் அவர்கள்.
தமிழ் எழுத்துக்களை தரப்படுத்தல் தொடர்பாக தமிழக அரசும் தமிழ் இணைய ஆர்வலர்களும் எடுத்து வரும் முயற்சிகளின் இறுதி முடிவுகள் எதிர்வரும் ஜூன் மாதம் நடக்க இருக்கும் தமிழ் இணைய மாநாட்டில் அறிவிக்கப்பட இருப்பதாகவும், அதன் பிறகு தமிழ் இணைய முகவரிகளின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
0 comments:
Post a Comment