>> Thursday, May 20, 2010



இலங்கையில் போர் முடிந்து ஒரு ஆண்டு ஆன நிலையிலும், போரின் முடிவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிப் போராளிகள் மற்றும் விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்கள் என்று அரசால் சந்தேகிக்கப்படும் நபர்களின் நிலை இன்னமும் இழுபறியாகவே உள்ளது.
இலங்கையில் மூன்று தசாப்தங்களாக அரசை எதிர்த்து போராடிய "விடுதலைப் புலிகள் சரணடைவதை விட சாவது மேல் என்பதை தங்களின் முக்கிய கோட்பாடாக கொண்டிருந்தனர்".

எனினும் போரின் இறுதி கட்டத்தில் ஏராளமான விடுதலைப் புலிகள் அரச படையினரிடம் சரணடைந்தனர்.

மக்களோடு கலந்து அகதிகள் முகாம்களுக்கு வந்த விடுதலைப் புலிகள் பலரும் அரசால் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு மிக்க இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சுமார் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பு மிக்க முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருக்கும் முகாம்களுக்கு செல்ல சர்வதேச நிறுவனங்களுக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் இலங்கை அரசு அனுமதி மறுத்து வருகிறது.


விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்
இப்படியாக அரசின் தடுப்பில் இருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை அவர்களது உறவினர்கள் வந்து சந்திக்க அரசு அனுமதியளித்துள்ள போதிலும், தம்மை சந்திக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொல்லை ஏற்படக் கூடும் என்கிற கருத்தும் சிலரிடம் இருகின்றது.

ஆனால் அப்படியான தொல்லைகள் ஏதும் உறவினர்களுக்கு ஏற்படாது என்று மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறுகின்றார்.

விடுதலைப் புலிகளோடு சம்மந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் பலர் தற்போது அகதிகள் முகாம்களிலும் மீள் குடியேற்றம் நடைபெறும் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

இந்த முகாம்களில் இருப்போரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், குவாண்டனமோ வளைகுடாவில் அமெரிக்கா அமைத்துள்ள சிறையில் நடந்தது போன்ற வன்கொடுமைகள் இங்கு நடப்பதாகவும், புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் குற்றம்சாட்டுகின்றன.

ஆனால் இவை ஆதாரபூர்வமாக நிருபிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் இந்த விடயத்தில் அரசு ஒளிவுமறைவற்ற தன்மையைப் பேணவில்லை என்று குற்றம்சாட்டும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இவர்கள் முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறிகிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter