>> Monday, May 17, 2010

'கூட்டு முயற்சி'



இலங்கையில் நீண்ட காலமாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில், சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுடனும் சமூக அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது என தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கூட்டாக முடிவு செய்துள்ளன.
அப்படியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், ஒரு கருத்தொற்றுமையை ஏற்படுத்தி, அதன் அடிப்படையில் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவது என்கிற நிலைப்பாட்டுக்கு இந்த இருகட்சிகளும் வந்துள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் துணைப் பொதுச்செயலர் நிசாம் காரியப்பர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனும்கூட இருதரப்பும் பேசிவருவதாகவும், அவர்களிடமும் இது தொடர்பில் சாதகமான நிலைப்பாடு இருப்பதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

“அரசாங்கம் அவசர அவசரமாக கொண்டுவரும் அரசியல் யாப்பு திருத்தச் சட்டத்துக்குள், சிறுபான்மையினருடைய உரிமைகளை பாதுகாத்துக் கொள்வது” என்பதை மையப்படுத்தியே இந்த இருதரப்புக்கும் இடையேயான கூட்டம் நடைபெற்றது என்றும் நிசாம் காரியப்பர் கூறுகிறார்.


நாட்டில் சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து அரசுடன் பேசும்போது, அரசாங்கத்தின் மீது நிச்சயமாக ஒரு அழுத்தம் ஏற்படும்.


நிசாம் காரியப்பர்

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட வேண்டும் எனும் நோக்கில், அரசியல் யாப்பில் அது சம்பந்தமான தடையை நீக்க திருத்தங்களைக் கொண்டுவர முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.

அப்படியான சந்தர்ப்பத்தில், சிறுபான்மை கட்சிகள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்தால், அதை பயன்படுத்திக் கொண்டு தங்களது உரிமைகள் தொடர்பான விடயங்களையும் வென்றெடுக்க முடியும் என்பது குறித்து இரு தரப்பும் கலந்துரையாடியதாகவும் நிசாம் காரியப்பர் தெரிவிக்கிறார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசியது போலவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் பேச முன்வந்தால் அதை தமது கட்சி வரவேற்கும் எனவும் அவர் கூறுகிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter