>> Monday, May 10, 2010


லிபரல் டெமாக்கிரடிக் கட்சித் தலைவர்
பிரிட்டனில் யார் ஆட்சி?



பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் கன்சர்வேடிவ் கட்சியினரும் லிபரல் டெமாக்கிரடிக் கட்சியினரும் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர்.
கன்சர்வேடிவ் கட்சியினர் தங்களோடு ஒத்துவருவதாக தெரிவித்த விடயங்கள் குறித்து விவாதிப்பதற்காக லிபரல் டெமாக்கிரடிக் கட்சித் தலைவர் நிக் கிளெக் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளார்.

நிக் கிளெக் தம்மிடையிலான கூட்டத்திலிருந்து சற்று நேரம் வெளிவந்து பிரிட்டனின் தேர்தல் முறையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ சீர்திருத்தங்கள் வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்த ஆயிரக்கணக்கானோர் முன்பு உரையாற்றிவிட்டுச் சென்றுள்ளார்.

தேர்தல் சீர்திருத்தம் வேண்டும் என்ற கோரிக்கையில் தனக்கு ஈடுபாடு குறையவில்லை என்றும், ஆனால் தற்போது கன்சர்வேடிவ் கட்சியுடன் தாம் ஈடுபட்டுவரும் பேச்சுவார்த்தைகளின் விபரங்களை வெளியிட முடியாது என்றும் நிக் கிளெக் கூறினார்.

ஆனால் தேர்தல் முறையில் சீர்திருத்தம் வேண்டும் என்ற லிபரல் டெமாக்கிரடிக் கட்சியின் முக்கிய லட்சியம் தொடர்பில் கன்சர்வேடிவ் கட்சியினர் எந்த ஒரு வாக்குறுதியையும் வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கன்சர்வேடிவ்-லிபரல் டெமாக்கிரட் கட்சிகள் இடையில் ஒப்பந்தம் ஒன்று ஏற்படலாம்; ஆனால் இரண்டுமே ஆட்சியில் பங்குகொள்ளும் கூட்டணி அரசு உருவாவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று பிபிசியின் அரசியல் விவகார செய்தி ஆசிரியர் கூறுகிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter