>> Thursday, May 20, 2010
போர் முடிந்து ஓராண்டாகியும் மக்கள் முகாம்களில் உள்ளனர்
போர் முடிந்தும் இனஉறவுகள் மேம்படவில்லை
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போர் கடந்த ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்த நிலையில், அங்கு அடுத்தது என்ன என்கிற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பல ஆண்டுகளாக சமூகங்களுக்கு இடையே சீர்குலைந்து போயிருந்த இன உறவுகளை சீரமைக்கின்ற பணி இன்னும் இலங்கையில் பெரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை என்று ஆய்வாளரும் இலங்கை விடயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவருமான டி பி எஸ் ஜெயராஜ் கூறுகிறார்.
டி பி எஸ் ஜெயராஜ் பேட்டி
போர் ஏற்படுத்திய பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகள் கூட இன்னமும் திருப்தியளிக்கும் வகையில் செயற்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இன உறவுகளை சீரமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை என்று அவர் கூறுகிறார்.
நாட்டில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்கிற பாகுபாடு இனி இல்லை என்று ஜனாதிபதி கூறுவது கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், நடைமுறையில் உள்ள அடிப்படை இனப்பிரச்சினையின் முரண்பாடுகளையும் அதன் மூலக்கூறுகளையும் புரிந்து கொள்ளாமல் ஒரு மேலோட்டமான பார்வையே அரசு தரப்பில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது என்றும் ஜெயராஜ் கருத்து வெளியிடுகிறார்.
அபிவிருத்திகள் மூலம் இனப்பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்கிற கருத்து அரசிடம் இருப்பது போலத் தோன்றுகிறது என்றும் கூறும் அவர், இனப்பிரச்சினை என்பது ஒரு பயங்கரவாதப் பிரச்சினை என்றும் அது தற்போது முடிந்து விட்டது என்கிற கருத்தும் ஆளும் தரப்பில் நிலவுவதாகவும் குறிப்பிடுகின்றார்.
“அடிப்படை பிரச்சினை அரசியல் பிரச்சினை இரண்டுமே முக்கியம்தான்” என்று கூறும் ஆய்வாளர் ஜெயராஜ், போரினால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களையும் பிணியையும் தீர்ப்பதற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டுகிறார்.
மீள்குடியேற்றம் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாததும், திருப்தியளிக்கும் வகையிலும் இல்லாததும் இதற்கு உதாரணம் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
இனப்பிரச்சினை தொடர்பில் அரசு வைத்திருக்கும் கண்ணோட்டம், சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகள் வைத்திருக்கும் கண்ணோட்டத்துக்கு முரணாகத்தான் இருக்கிறது
இலங்கையில் ஒற்றையாட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு என்பது 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே என்ற வலுவான கருத்தில் அரச தரப்பும், சமஷ்டி மற்றும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை விட்டுவிட்டு புதிய அணுகுமுறை வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் உறுதியாக இருக்கும் நிலையில், இரண்டுக்கும் இடையே இருதரப்பையும் மீண்டும் சந்திக்க வைத்து ஒரு பொது நிலைப்பாட்டை கொண்டு வருவதற்கு ஒரு புறசக்தி தேவைப்படுகிறது என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.
அந்தப் புறசக்தியின் ஈடுபாடு ஏற்படுகிற வரையில் அரசியல் தீர்வு விடயத்தில் இழுபறி நிலைமையே தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று தான் கருதுவதாகவும் அவர் கூறுகிறார்.
0 comments:
Post a Comment