>> Tuesday, May 18, 2010
கிரிக்கெட்டில் அரசியல்?
ஜெயசூரியா அணியில் நீடிப்பதில் அரசியல் அழுத்தம் தரப்படுவதை அணித் தலைவர் சங்ககார எதிர்ப்பதாக கூறப்படுகிறது
இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியில் சனத் ஜெயசூரியா தொடர்ந்து விளையாடி வருவது அந்நாட்டின் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளில் நடந்துவரும் இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் இலங்கை அணி அரை இறுதி ஆட்டத்தில் தோற்றுள்ள நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.
இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜெயசூரியா மாபெரும் நட்சத்திர அந்தஸ்துடன் விளையாடிவந்தவர் என்றாலும், அவர் சிறப்பாக விளையாடிய காலம் முடிந்துவிட்டது, ஆனால் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் அணியில் நீடிக்கிறார் என்று பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது.
நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் தேசிய அணியில் இடம்பெற்று சர்வதேச கிரிக்கெட் விளையாடுவது என்பது இதற்கு முன் உலகில் நடந்ததில்லை.
இலங்கை ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாகப் அண்மையத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சனத் ஜெயசூரியா கிட்டத்தட்ட 41 வயது ஆகியும் தனது விளையாட்டு வாழ்க்கையை நீடித்துக்கொண்டுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளில் நடந்துவருகின்ற இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை அணி அரையிறுதி வரை வந்திருந்தது.
ஆனால் ஜெயசூரியாவோ ஆடிய ஆறு ஆட்டங்களில் மொத்தமாகவே பதினைந்து ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அதுவும் இலங்கை கடைசியாக விளையாடிய நான்கு ஆட்டங்களில் அவர்தான் துவக்க ஆட்டக்காரர் என்றாலும் அவரால் ரன் எடுக்க முடியவில்லை.
இலங்கையைப் பொறுத்தவரை தேசிய கிரிக்கெட் அணியில் விளையாட தேர்வுக் குழுவினர் தெரிவு செய்யும் வீரர்களுக்கு நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
சனத் ஜெயசூரியா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என இலங்கையின் ஊடகங்களிலும் வலைப்பதிவுகளிலும் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
அதேநேரம் சனத் ஜெயசூரியா அணியில் நீடிப்பதற்கு ஆதரவாகவும் சில ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment