>> Tuesday, May 11, 2010

வத்திக்கான் வானொலி – செய்திகள் 10.05.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
போர்த்துக்கல் திருப்பயணத்திற்காகச் செபிக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்
மே10,2010 திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இச்செவ்வாய்க்கிழமை தொடங்கும் போர்த்துக்கல் நாட்டுக்கான தமது திருப்பயணத்திற்காகச் செபிக்குமாறு இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் விசுவாசிகளைக் கேட்டுக் கொண்டார்.
வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஏறக்குறைய இருபதாயிரம் திருப்பயணிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, இந்த மே 11 முதல் 14 வரை போர்த்துக்கல் நாட்டு லிஸ்பன் மற்றும் பாத்திமா நகரங்களுக்குத் தான் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம் குறித்துப் பேசினார்.
ஜசிந்தா, பிரான்சிஸ் ஆகிய இரண்டு சிறிய இடையர்கள் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்டதன் பத்தாம் ஆண்டைச் சிறப்பிப்பதுவே பாத்திமாவுக்கானத் தனது திருப்பயணத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
வணக்கத்துக்குரிய திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மனதுக்கு மிகவும் பிடித்த இந்த பாத்திமா மாதா திருத்தலத்திற்குப் புனித பேதுருவின் வழிவருபவர் என்ற முறையில் முதன்முறையாகச் செல்வதாகவும் உரைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அப்பயணத்தில் அனைவரும் செபத்துடன் தன்னோடு பயணம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
மே மாதத்தை அன்னைமரிக்கு அர்ப்பணிப்பது திருச்சபையில் மரபுவழி வழக்கமாக இருக்கின்றதென்றும், கடவுளின் படைப்பில் மிக அழகான மலராக மலர்ந்தவர் மரியாளே என்றும் திருத்தந்தை விசுவாசிகளிடம் கூறினார்.
கடவுள் தம் மகனை இவ்வுலகுக்கு அனுப்பிய அந்த நிறைவான காலத்தில் ரோஜாவாகிய மரியென்னும் மலர் உலகில் தோன்றியது, அத்துடன் உலகுக்கு புதிய வசந்தத்தைக் கொடுத்தது என்றுரைத்த அவர், கிறிஸ்தவர்களுக்கு மரியா இயேசுவின் முதலும் நிறைவுமான சீடத்தியாக இருக்கிறாள் என்றார்.
இஞ்ஞாயிறு நற்செய்தி பற்றியும் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, இதில் கிறிஸ்து தூயஆவி பற்றிப் பேசுகிறார், இவ்வேளையில் தூய ஆவியின் ஆலயமாகிய மரியாவை நாம் எப்படி நினைக்காமல் இருக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்பினார் திருத்தந்தை.
இன்னும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மேற்கொள்ளவிருக்கின்ற போர்த்துக்கல் நாட்டுக்கானத் திருப்பயணத்தில் எல்லாரும் உயிரூட்டமுடன் கலந்து கொள்ளுமாறு போர்த்துக்கல் நாட்டுப் பிதாப்பிதா கர்தினால் ஜோஸ் பொலிகார்ப்பு அழைப்பு விடுத்துள்ளார்.

திருத்தந்தை- பிரேசில் நாட்டு மையமாக திருநற்கருணை கண்டுணரப்பட வேண்டும்
மே10,2010 மேலும், வருகிற வியாழன் முதல் ஞாயிறு வரை பிரேசில் நாட்டில் நடைபெறவிருக்கும் 16வது தேசிய திருநற்கருணை மாநாட்டிற்கும் இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பிரேசில் நாட்டின் இதயமே திருநற்கருணைதான் என்றும் இம்மாதம் 13 முதல் 16 வரை இடம் பெறும் இந்த மாநாட்டின் போது அந்நாட்டு மக்களுடன் தான் ஆன்மீக ரீதியில் ஒன்றித்திருப்பதாகவும் உறுதி கூறினார் திருத்தந்தை.
தனது சிறப்புப் பிரதிநிதியாக கர்தினால் க்ளவ்தியோ ஹூயூம்ஸ் இதில் கலந்து கொள்ளவிருப்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, பிரேசில் நாட்டு அனைத்து மேய்ப்பர்களும் விசுவாசிகளும் உங்கள் நாட்டின் மையமாகத், திருநற்கருணையை கண்டுணர வேண்டுமெனத் தான் வாழ்த்துவதாகவும் கூறினார்.

சமுதாயம் எதிர்நோக்கும் குடியேற்றதாரர் குறித்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஆய்வுகளில் பள்ளிகள் ஈடுபட வேண்டும் - பேராயர் மரிய வெலியோ
மே10,2010 மக்களின் பன்மைத்தன்மையை வரவேற்று போற்றி வளர்ப்பதற்கான திறமைகளில் மக்களுக்குப் பயிற்சி கொடுப்பதில் முனைந்து நிற்கும் இத்தாலிய கல்வி நிறுவனங்கள், அவை இந்தத் தம் பணிகளைத் திறம்படச் செய்வதற்கு உதவிகள் செய்யப்பட வேண்டும் என்று திருப்பீட குடியேற்றதாரர் அவைத் தலைவர் பேராயர் அந்தோணியோ மரிய வெலியோ கூறினார்.
இத்தாலியின் மிலான் கத்தோலிக்கப் பல்கலைகழகத்தில் நடைபெற்ற குடியேற்றதாரர் குறித்த கருத்தரங்கில் இத்திங்களன்று உரையாற்றிய பேராயர் வெலியோ, தற்போது சமுதாயம் எதிர்நோக்கும் முக்கியமான குடியேற்றதாரர் குறித்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஆய்வுகளில் பள்ளிகள் ஈடுபட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
ஜனநாயகம், மனித உரிமைகள், அமைதி, சுற்றுச்சூழல், ஒத்துழைப்பு, சர்வதேச புரிந்து கொள்ளுதல், ஏழ்மையை அகற்றுதல், பல்சமய உரையாடல், உறுதியான வளர்ச்சி தொடர்புடைய விவகாரங்கள் போன்றவைகள் பற்றி ஆராய்ச்சிகள் நடத்துவதற்கும் அவற்றைப் போதிப்பதற்கும் பள்ளிகளுக்கு உதவிகள் அவசியம் என்றும் பேராயர் கூறினார்.
வரிக் கொள்கை, வீட்டுவாரியம், கண்காணிப்பு, சமூகப் பாதுகாப்பு, நலவாழ்வு, அனைவருக்கும் வாழ்வு போன்ற விவகாரங்களிலும் புதிய கொள்கைகள் வரையறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் குறித்த மத்திய பிரதேச நீதிமன்றத் தீர்மானத்திற்குத் தலத்திருச்சபைத் தலைவர்கள் வரவேற்பு
மே10,2010 இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில், சிறுபான்மை மாணவர்க்கு மட்டும் முன்னர் ஒதுக்கப்பட்டிருந்த இடங்களை மற்ற மாணவர்களுக்குக் கொடுப்பதற்கு அனுமதியளித்துள்ள நீதிமன்றத் தீர்மானத்தை தலத்திருச்சபைத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்றுப் பேசிய ஜபல்பூர் ஆயர் ஜெரால்டு அல்மெய்தா,(Gerald Almeida) வருங்காலத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் திறமையுடன் செயல்படுவதற்கு இந்தத் தீர்ப்பு உதவும் என்று கூறினார்.
மத்திய பிரதேச மாநிலக் கல்விக் கொள்கையின்படி சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அந்த வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50 விழுக்காடு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்தக் கொள்கையின்படி பள்ளிகளில் இடங்கள் காலியாக இருந்தால் அந்த இடங்களில் மற்றவர்களையும் சேர்க்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வடகொரிய ஆயர்கள் இருக்குமிடம் தெரியவில்லை
மே10,2010 உலகில் உண்மையான ஸ்டாலினிச ஆட்சி நடைபெறும் வடகொரிய கம்யூனிச நாட்டில் கத்தோலிக்க ஆயர்கள் காணாமற்போயுள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆயர்களின் நிலை குறித்து கேட்கப்பட்ட விபரங்களுக்கு 1980களிலிருந்து எந்த ஓர் அதிகாரியும் பதில் அளிக்கவில்லை என்று ஆசியச் செய்தி நிறுவனம் குறை கூறியது.
கத்தோலிக்கப் புவியியல் அமைப்பின்படி வடகொரியா, Pyongyang, Hamhung, Chunchon ஆகிய மூன்று மறைமாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. Tomwok பகுதி மட்டும் நேரிடையாகத் திருப்பீடத்தின்கீழ் உள்ளது.
கடந்த நூற்றாண்டின் பாதியில் தலைநகர் Pyongyang மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினர் கத்தோலிக்கராக இருந்தனர். ஆனால் அந்த நூற்றாண்டின் இறுதியில் அது ஒரு விழுக்காடானது. 1950க்கும் 1953க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற கொரியச் சண்டையில் கம்யூனிசப் படைகள் தென்பகுதியில் அத்துமீறி நுழைந்து மறைபோதகர்களையும், வெளிநாட்டு துறவிகளையும், கொரியக் கிறிஸ்தவர்களையும் வேட்டையாடின. வடகொரிய அரசு, வடக்கில் துறவு மடங்களையும் ஆலயங்களையும் அழித்தது. துறவிகளையும் குருக்களையும் கைது செய்து மரண தண்டனைக்கு உட்படுத்தியது என்று சொல்லப்படுகிறது.
கொரியாவில் உள்நாட்டுச் சண்டை முடிந்த 1953ம் ஆண்டுக்குப் பின்னர், அந்தத் தீபகற்பம் வடக்கு மற்றும் தெற்கு எனப் பிரிந்தது.

உலகில் குழந்தைத் தொழில் முறை அகற்றப்படுவதற்கான முயற்சிகள் புதுப்பிக்கப்பட வேண்டும்-ஐ.நா.வின் புதிய ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.
மே10,2010 உலகில் மிகமோசமான விதத்தில் இடம் பெறும் குழந்தைத் தொழில் முறையை ஒழிப்பதற்கான முயற்சிகள் தொய்வு கண்டு வரும்வேளை, சமுதாயத்தின் வடுவாக இருக்கும் இதனை அகற்றுவதற்கு முயற்சிகள் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.வின் தொழில் நிறுவனத்தின் புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தத் தொழில் நிறுவனம் வெளியிட்ட குழந்தைத் தொழில் குறித்த அறிக்கையின்படி, 2016ம் ஆண்டுக்குள் இது ஒழிக்கப்படுவதற்கான இலக்கை அடைய வேண்டுமானால் அதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட வேண்டுமெனப் பரிந்துரைக்கிறது.
2004லிருந்து 2008ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் குழந்தைத் தொழிலாளரின் எண்ணிக்கை 22 கோடியே 20 இலட்சத்திலிருந்து 21 கோடியே 50 இலட்சமாகக் குறைந்துள்ளது, அதாவது 3 விழுக்காடு குறைந்துள்ளது.
நெதர்லாண்ட்ஸில் இத்திங்களன்று ஆரம்பித்துள்ள உலகக் குழந்தைத் தொழில் கருத்தரங்கை முன்னிட்டு இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாடகை தாய்ப் பெருக்கம் ; வட மாநில பெண்களை நாடும்
மே10,2010 இந்தியாவில் வறுமை மற்றும் குடும்ப சூழல் காரணமாக வாடகை தாய்த் தொழிலில் இறங்கும் பெண்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் எனவும் இவர்கள் இத்தொழிலில் மனநிறைவோடு ஈடுபடுவதால் அவர்களுக்குப் புதியதொரு மகிழ்ச்சி கிடைப்பதாகவும் ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
இந்த விடயம் உலக அளவில் இந்தியாவில் தான் மலிவான விலையில் முடிக்கப்பட்டு விடுகிறதெனவும் கூறும் அச்செய்தி, இந்தியாவின் வட மாநிலங்களில் இதற்கான மருத்துவமனைகளில் இருபது இலட்சம் ரூபாய் வரை பெறப்படுகிறது எனவும் தெரிவிக்கிறது.
வாடகை தாய்க்கு 80 ஆயிரம் ரூபாய் முதல் 2 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 150 குழந்தையாவது வாடகைக்கு பிறந்து விடுகிறது என ஒரு புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது.
வாடகைத் தாயை அமர்த்துதல், மருத்துவச் செலவு, குழந்தை பிறப்பு மற்றும் சட்டத்திற்குட்பட்ட விடயத்திற்கான செலவு ஆகியவற்றை அந்த மருத்துவமனையே பார்த்துக்கொள்ளுகிறதெனவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter