>> Wednesday, May 19, 2010
ஒராண்டு முடிந்தும் "உதிக்காத வசந்தம்"
உதவி கிடைக்காமல் உள்ள உடல் ஊனமுற்றோர்
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு ஆண்டான பிறகும், அரசின் நடவடிக்கைகள் போரில் உடல் உறுப்புக்களை இழந்தவர்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றே பலரும் கூறுகின்றார்கள்.
வைத்திய வசதிகளும், தொழில் வாய்ப்புகளுக்கான ஆரம்ப உதவிகளும் பலரது முக்கியமான அவசரத் தேவைகளாக இருக்கின்றன.
யுத்த மோதல்களில் சிக்கி குறிப்பாக ஷெல் தாக்குதல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையானவர்கள் உடல் உறுப்புக்களை இழந்துள்ளார்கள். இவர்களுக்குரிய உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. எனினும் கணிசமான தொகையினர் தொடர்ந்து வைத்திய கவனிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என அங்குள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
போரின்போது அவயவங்களை இழந்தவர்களின் சரியான புள்ளி விபரங்கள் இன்னும் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவரவில்லை. மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் இந்த விபரங்களைத் திரட்டுவதற்குத் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றார்கள்.
உடலால் பாதிக்கப்பட்டவர்கள் நண்பர்கள், உறவினர்களது வீடுகளிலும், இடைத்தங்கல் முகாம்களிலும், அரச மற்றும் தொண்டு நிறுவன புனர்வாழ்வு நிலையங்களிலும், மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களிலும் பரந்து வாழ்வதே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
உடல் உறுப்புக்களை இழந்துள்ளவர்கள் தமது வாழ்க்கையைத் தொடர்வதற்கு வசதியாக அவர்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தலும், உளசமூக, பொருளாதார உதவிகளும் வழங்கப்பட வேண்டிய தேவை இருப்பதாக உளவளத்துணையாரான பி.ஏ.சி. ஆனந்தராஜா கூறுகின்றார்.
இதற்கு அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து பாரிய வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.
0 comments:
Post a Comment